முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான்

🕔 November 2, 2016
Mujibur Rahman - 095ரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.

உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜீ.எஸ்.பி. சலுகை பெறுவதற்காக,  முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கோரப்பட்டதாக வெளிவரும் தகவல் தொடர்பில் முஜீபுர் றஹ்மான்  அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையிலேயே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையான மாற்றங்கள் – குர்ஆன்,  சுன்னா அடிப்படைகளுக்கு மாற்றமில்லாமல் இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக எந்த சர்வதேச அமைப்புகளினதும் நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்றவாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்க நாம் இடம்கொடுக்க முடியாது.

அரசாங்கம் முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்திருக்கிறது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, இந்த உபகுழுவுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த உபகுழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உலமா சபையினர் மற்றும் துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின்  ஆலோசனைகளைப்பெற்றே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான முடிவை அரசாங்கம் அல்ல, முஸ்லிம்களே எடுக்கவேண்டும்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள கண்டிச் சிங்கவர் சட்டம், யாழ் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என்று பல தரப்பட்டவர்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கை கடந்த மூன்று தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1986ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் கண்டிச் சிங்கவர் சட்டம், யாழ் தேசவழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டி, ஒரு குழுவை அன்றைய அரசாங்கம் அமைத்தது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கூட அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் தவைராக சிரேஷ்ட சட்டத்தரணி சலீம் மர்சூக் நியமிக்கப்பட்டார். அந்த அறிக்கை கூட நவம்பர் இறுதியில் வெளிவரவிருக்கிறது. இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவை  என்ற நிலைப்பாட்டில் பல உலமாக்கள், முஸ்லிம் சட்டத்துறை சார்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளனர்.

தற்போது அமுலிலுள்ள 1951ம் ஆண்டின் 16ஆம் பிரிவில் உள்ள இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள திருமணம் முடிப்பதற்கான பெண்ணின் வயதெல்லை குறித்த விதி, சர்வதேச சமவாயங்களுக்கு உட்பட்டதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தனியார் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பல ஆண்கள், பெண்களுக்கு அநீதி இழைத்து வருவதும் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகின்றது. பெண்கள் மீதான அநீதங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் இடம்கொடுக்கும் விதிகளில் மாற்றம் கொண்டு வர, பலர் கோரிக்கை விட்டு வந்துள்ளனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு சில திருத்தங்கள் தேவை என்ற கருத்தில் உலமா சபையும் இருப்பதாக அறியவருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமை  சிறுபான்மை விவகாரங்களுக்கான அறிக்கையாளர் ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கை தொடர்பான பல பக்கங்களைக் கொண்ட தனது நீண்ட அறிக்கையில் இலங்கையில் இடம்பெறும் பெண்களுக்கான உரிமை மீறல்கள் தொடர்பாக எழுதிவிட்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள பெண்களுக்கான குறைந்த திருமண வயதெல்லை தொடர்பாகவும் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மாற்றப்பட வேண்டிய அரசியல், சமூக, சட்டம், நீதி மற்றும் பரிபாலனம் தொடர்பான விடயங்களைத் தொட்டுக் காட்டி அப்படியான அம்சங்களில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களின் குறைந்த வயதெல்லையும் ஒன்றாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ரீட்டா ஐசக்கின் அறிக்கையில் ராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் முதல் – அரச நிர்வாகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடற்ற நிலை, மொழியுரிமை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான பொதுபலசேனா போன்ற சிங்கள பௌத்த இனவாத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் சட்டங்களுடனான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுக்குத் தடையாக இருக்கும் பல விடயங்களை அவர் தனதறிக்கையில் முன்வைத்திருக்கிறார்.  மேற்குறித்த விடயங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையே இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை  இலங்கை பெறுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாததும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யுமாகும். ஜீஎஸ்பி சலுகையை இலங்கை பெறவேண்டுமாக இருந்தால் இலங்கை மனித உரிமையை மதிக்கும், சிறுபான்மை சமூகங்களை அரவணைத்து வாழும்  ஒரு நாடாக மாறவேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். ஆனால் அந்த அறிக்கையில் இருக்கும் உண்மையான கருத்துகள் முன்வைக்கப்படாமல், முஸ்லிம் தனியார் சட்டம் மட்டுமே ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறுவதற்கு தடையாக இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு தேசமாக இலங்கை மாற்றம் பெற்றால் மாத்திரமே, ஜீ.எஸ்.பி.  பிளஸ் போன்ற சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கும் என்பதே ஐ.நா. மனித உரிமை  சிறுபான்மை விவகாரங்களுக்கான அறிக்கையாளர் ரீட்டா ஐசக்கினுடைய அறிக்கையின் சாராம்சமாகும்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க் ஜீ.எஸ்.பி. சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தாம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தை கோரவில்லையென்றும், சர்வதேச சமவாயங்களுக்கமைய திருமண வயதை 16ஆக மாற்ற வேண்டும் என்பதே எமது நிபந்தனையாகும் என்றும் கூறியுள்ளதையும் இங்கு குறிப்பிட முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்