கிழக்கு முதலமைச்சராக இப்படியொருவர் இருப்பதை விடவும், இல்லாதிருப்பதே நல்லது: ஹாபிஸ் நசீர் குறித்து, அன்சில் ஆதங்கம்

🕔 October 29, 2016

anzil-013– றிசாத் ஏ காதர் –

ஸ்ஜிதுல் அக்ஸா தொடர்பில் இஸ்ரேல் ராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து ‘யுனஸ்கோ’ கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்காமல், இலங்கை அரசாங்கம் விலகி நின்றமையினை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கண்டிப்பதற்கு எடுத்த முயற்சியினை, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகின்ற செயற்பாட்டினை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கண்டித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்களில் முஸ்லிம் சமூகத்துக்காக செயற்படாதிருக்கும் ஒருவர், முஸ்லிம் முதலமைச்சர் எனும் பெயரில் இருப்பதை விடவும், இல்லாமல் போவதே மேலானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஷா மற்றும் ஜெரூசலம் ஆகிய பிரதேசங்களில், முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கும், சுதந்திரமான வழிபாட்டுக்கும் எதிராக வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேல் ராணுவத்தினரை கண்டித்து ‘யுனஸ்கோ’ பிரேரைணை ஒன்றிணைக் கொண்டுவந்தது. ஆனால், அதற்கு ஆதரவு வழங்காமல் இலங்கை விலகி நின்றது.

இதனைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவந்தார். ஆனால், கிழக்கு மாகாண சபையின், சபை நிகழ்ச்சி நிரலில் அது சேர்க்கப்படவில்லை. இது குறித்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது கண்டனத்தினை தெரிவிக்க வேண்யுள்ளது.

சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும்கட்சியின் அங்கமாக இருக்கின்ற இன்றைய நாடாளுமன்றத்தில், அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசாங்கமான இந்நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர், இஸ்ரேல் தூதுவராலயத்திற்கு சென்று கையொப்பமிட்டிருந்தார். மேலும், இஸ்ரேலுக்கெதிரான ‘யுனஸ்கோ’வின் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்ந நல்லாட்சி அராசாங்கம் வாக்களிக்காது விலகி நின்றது. இது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக மேற்கொள்ள செயற்பாடாகும். ஆனால், இது தொடர்பில் ஓரிருவரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் வாய்திறந்து பேசவில்லை.

கிழக்கு முதலமைச்சர் – முஸ்லிம் பெயர் தாங்கி

இந்நிலையில், இந்நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கெதிராக தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்த மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஆரிப் சம்சுடீன் பாராட்டுக்குரியவர். அவருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்டது கிழக்கு மாகாணம் மட்டும்தான். முஸ்லிம்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த சாத்தியமிருக்கின்ற ஒரேயொரு மாகாண சபையும் அது ஒன்றேதான். அதனால்தான், கடந்த மாகாண சபைத்தேர்தலில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர்.

ஆனால், அந்த முதலமைச்சர் வெறும் பெயர்தாங்கி முஸ்லிம் முதலமைச்சராக இருந்து கொண்டு, முஸ்லிம் சமூகத்துக்காக இவ்வாறான விடயங்களில் செயற்படாது விட்டால், அந்த முஸ்லிம் முதலமைச்சர் இருப்பதை விட, அப்படி ஒருவர் இல்லாதிருப்பதே மேலானதாகும்.

அஷ்ரப்பின் வழி காட்டல்

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென, கட்சி ஒன்றை ஆரம்பித்து செயற்படுவதற்கு முன்னரே, வெறும் இருபது வயது இளைஞராக இருந்த காலத்திலேயே, சர்வதேச முஸ்லிம் சமுதாயம் பற்றிய பிரக்ஞையோடு செயற்பட்டவர் மறைந்த மாமனிதர் அஷ்ரப்.

1969ஆம் ஆண்டு மஸ்ஜிதுல் அக்ஷா தீக்கிரையாக்கப்பட்டபோது, அதற்கெதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்து, தானே தலைமையேற்று நடத்தினார்.

இதன்மூலம், இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதனையும், சர்வதேச முஸ்லிம் சமூகத்துக்கான செயற்பாடுகளுக்கெதிராக போராட வேண்டியது, இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும் என்பதனையும் பறைசாற்றி நின்றவர் மாமனிதர் அஷ்ரப்.

துரோகம்

அவ்வாறான போராட்ட குணத்தினை விதைத்துவிட்டுச்சென்ற மாமனிதரின் கட்சி கிழக்கு மாகாணசபையில் ஆட்சியிலுள்ளது. அப்படியிருந்தும், இஸ்ரேலுக்கெதிராக செயற்படுவதினின்றும் விலகிய இந்நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டிக்கும் வகையிலான பிரேரணை, பத்து நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருந்தும்கூட, அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்காது மறுதலித்தமையினை, எதிர்ப்பதற்கு திராணியற்று இருந்தமையானது, தமது சமூகத்திற்காக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

குறித்த பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாதபோதிலும், அதுபற்றி சபையில் சகோதரர் ஆரிப் சம்சுடீன் கேள்வி எழுப்பியபோது, அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரைத் தவிர வேறெவரும் ஆதரவு வழங்கவில்லை என்பதும், அரசாங்கத்தின் கொள்கைக்கெதிரான விடயத்தினை விவாதத்திற்கு எடுக்க முடியாது என கட்சி உறுப்பினர்களை முதலமைச்சர் சமாதானப்படுத்தினார் என்பதும் மிகவும் பாரதூரமான விடயங்களாகும்.

முஸ்லிம் உறுப்பினர்களின் அக்கறையின்மை

அதேவேளை, மதியத்திற்கு பின்னரான அமர்வில் இப்பிரேரனை எடுக்கப்பட இருந்ததாகவும், அதற்கான கோரம் சபையில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இவ்விடயத்தில் அக்கறையோடு செயற்பட்டிருந்தால் கோரம் இல்லாமல் போகுமளவு வாய்ப்பிருந்திருக்காது.

ஆக, இவ்விடயத்தில் முதலமைச்சர் தனது விளக்கத்தினை பகிரங்கமாக, வாக்களித்த மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சியின் கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் வாக்களித்த மக்கள் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்