அம்பியுலன்ஸ் சாரதி தூங்குகிறார், எழும்பி வர ஒரு மணி நேரமாகும்: பாலமுனை வைத்தியசாலையில் புதினம்
– றிசாத் ஏ காதர் –
விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்காமல் – வேறு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதேவேளை, கடுமையாக காயமடைந்த நபரை அம்பியுலன்ஸ் வண்டியில் அனுப்புமாறு, அவரை அழைத்து வந்தவர்கள் கோரிய போதும், அம்பியுலன்ஸ் சாரதி தூங்குவதாக, அங்கு கடமையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது;
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வளைவில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும் மகனும் விபத்துக்குள்ளாகினர். இதில் மகனின் தாடைப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்திருந்தவர்கள் அருகிலுள்ள பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது நேரம் இரவு 11.00 மணியைத் தாண்டியிருந்தது.
பாலமுனை வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்களைக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் – அவர்களுக்கு சிகிச்சை வழங்காமல், வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும், காயத்துக்குள்ளானவர்களை பாலமுனை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக, அனுமதிக்கும் மற்றைய வைத்தியசாலையில் கூற வேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் கடுமையான உபாதைக்கு உள்ளாகியமையினால், அவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் உடனடியாக அனுப்பி வைக்குமாறு, பாலமுனை வைத்தியசாலை ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அங்கிருந்த ஊழியர்கள்; “அம்பியுலன்ஸ் சாரதி தூங்குகிறார். அவர் எழும்பி வருவதென்றால் ஒரு மணித்தியாலமாகும்” என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த நபர்கள் இருவரும், முச்சக்கர வண்டியொன்றில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரத்தில் முறையாக கடமைகள் இடம்பெறுவதில்லை என, சில காலங்களுக்கு முன்னர் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், அந்த வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அதிகாரியொருவரை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.