இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்
🕔 October 29, 2016
– முன்ஸிப் அஹமட் –
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து இன்று சனிக்கிழமை பெளத்த மதகுருமார்களுடன் பெருமளவான வாகனங்களில் வந்தவர்கள், மேற்படி பகுதியில் புத்தர் சிலையொன்றினை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில் பௌத்தர்கள் எவரும் வசிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமைக்கு மாணிக்கமடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதன்போது – தங்களுக்கு இலங்கையின் எப்பகுதியிலும் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு அதிகாரம் உள்ளது என, சிலையை வைத்தவர்கள் கூறியதாகவும் மாணிக்கமடு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளை ஆக்கிரமிப்புச் செய்யும் வகையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிக்குப்பட்ட பகுதியில், இன்று – புதிதாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.
இவ் விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டுமென இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதிகளுக்கு, இறக்காமம் பிரதேசத்திலிருந்து இவ்விடயம் தொடர்பில் தொலைபேசி மூலமாக அறிவிக்கப்பட்ட போதிலும், எவரும் இதுவரை களத்துக்குச் சென்று நிலைமையினைப் பார்வையிடவில்லை எனவும் அறியமுடிகிறது.