கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு
– அஹமட் –
கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
முதலமைச்சரைச் சந்திப்பதற்காக இன்று வியாழக்கிழமை, முதலமைச்சரின் அலுவலகத்துக்கு ஆசிரியைகள் வந்திருந்தனர்.
தமது வசிப்பிடங்களிலிருந்து தூரப் பகுதிகளில் கடமையாற்றும் தமக்கு, அண்மைய பகுதிகளில் பணியிடங்களை வழங்குவதற்கு சிபாசிசு செய்யுமாறு, இவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து, பேசிக்கொண்டிருந்தனர்.
இதன்போது முதலமைச்சரின் அலுவலகத்தினுள் மாகாணசபை உறுப்பினர் தவமும் இருந்துள்ளார்.
இவ்வமையம், முதலமைச்சரின் அலுவலகக் கதவினைத் திறந்து கொண்டு, கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்ட மு.கா. உறுப்பினர் அன்வர் வந்தார்.
இதைக் கண்ட மாகாணசபை உறுப்பினர் தவம் “சீயெம்ட ஒஃபிஸ், வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” எனக் கூறியுள்ளார்.
மாகாணசபை உறுப்பினர் தவத்தின் இந்த அசிங்கமான வார்த்தைப் பிரயோத்தினால் அங்கிருந்த பெண் ஆசிரியைகள் அவமானப்பட்ட நிலையில், தலைகுனிந்தவாறு முதலமைச்சரின் அலுவலக அறையினை விட்டு வெளியேறினர்.
ஆயினும், மாகாணசபை உறுப்பினர் தவம் இவ்வாறு அநாகரீகமாகப் பேசியமை தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் எதுவும் கூறாமல் வாய்மூடி மௌனமாக இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.