ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்

🕔 October 27, 2016

safees-0123– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான தொழிலதிபர் எஸ்.எம். சபீஸ் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியை அன்பளிப்புச் செய்வதற்கான ஆவணங்களை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுதீனிடம் சபீஸ் கையளித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைக்கும் பொருட்டு, அரசாங்கம் 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், குறித்த சிகிச்சை நிலையத்தினை அமைப்பதற்காக, அண்மையில் சில அரசியல்வாதிகள், அக்கரைப்பற்று 06 ஆம் பிரிவிலுள்ள வேறு திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான இடமொன்றில் அடிக்கல் நட்டனர்.

எவ்வாறாயினும், அடிக்கல் நடப்பட்ட இடத்தில், குறித்த சுகாதார சிசிக்சை நிலையத்தினை அமைப்பதில் சிக்கல்கல் தோன்றின.

இதன் காரணமாக,  மேற்படி சுகாதார சிசிக்சை நிலையத்தினை, அப்பகுதியில் நிர்மாணிக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டது.

இதனைக் கவனத்திற்கொண்ட அப் பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்கள், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீசிடம் சென்று நிலைமையினை விளக்கியதோடு, அப்பகுதியிலுள்ள சபீசின் காணியொன்றினை, சுகாதார சிசிக்சை நிலையத்தினை அமைப்பதற்காக அன்பளிப்புச் செயுமாறும் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து, தற்போதைய சந்தைப் பெறுமதியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியொன்றினை, குறித்த சுகாதார சிகிச்சை நிலையத்தினை அமைக்கும் பொருட்டு, அன்பளிப்பாக வழங்குவதாக சபீஸ் உறுதியளித்தார்.

இந்த உறுதிமொழியினை நிறைவேற்றும் வகையில், நேற்று புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியினை அன்பளிப்புச் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு, அவற்றினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுதீனிடம் சபீஸ் கையளித்தார்.

இந் நிகழ்வில், கல்முனை பிராந்திய  பிரதி சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஏ. இஸ்ஸதீன், தொற்றா நோய் பிரிவின் பொறுப்பாளர் டொக்டர் ஏ.ஆர். ஹாரிஸ், தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பாளர் டொக்டர் என். ஆரிப் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஏ.எம். ஜௌபர் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.safees-0124

 

Comments