எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 June 26, 2015

Hakeem - press con - 111கிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக் கூறி வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லை வோட்டரஸ் எஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் முழு நோக்கத்தையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் நான் கூறியதற்கு தவறான வியாக்கியானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை சில ஊடகங்களில் காணக்கிடைக்கிறது.

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை அகற்றி, புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரும், நாங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறியதை, மகிந்த ராஜபக்ஷவை வெளியேற்றியதற்காக, நான் கவலைப்படுவதாக திரிவுபடுத்தி கூறப்பட்டிருந்தது.

20ஆவது சட்டத் திருத்தத்தினால் மக்களை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியைப் பற்றிக் கூறிய போதே – மகிந்த ராஜபக்ஷவைப் பற்றியும் நான் குறிப்பிட நேர்ந்தது. மஹிந்தவைப் புறந்தள்ளப் போய், வேறு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறோம் எனத்தான் கூறினேன். மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அவரை தோற்கடித்ததற்காக நான் கவலைப்படவில்லை.

அமைச்சரவைக்குள் சிலர் சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்கின்றனர் என்று நான் குறிப்பிட்டதை, அமைச்சர் ராஜித பிழையாக விளங்கிக் கொண்டு, அவரைச் சுட்டிப் பேசியதாக தனக்குத் தானே அர்த்தம் கற்பித்துக் கொண்டு, மிக ஆவேசமாகவும், ஆத்திரமாகவும் ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசியுள்ளார். ஜனாதிபதி கதிரை கிடைப்பதாக இருந்தால் நான் மதத்தையும் மாற்றிக் கொள்ள துணிந்து விடுவேன் என மிக கீழ்த்தரமாக தெரிவித்திருக்கிறார். அமைச்சரவைப் பேச்சாளர் என்ற அந்தஸ்தில் இருக்கின்றவர், இவ்வளவு தூரம் பொறுப்புணர்ச்சி இல்லாமல் ஆத்திரம், ஆவேசப்படுவது பொருத்தமானதல்ல.

ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்டு, எனது மதத்தைக் கூட நான் மாற்றிக் கொள்வேன் என, அமைச்சர் ராஜித கூறுவது என்னை மட்டுமல்ல, எனது சமயத்தையும், அதனைப் பின்பற்றுபவர்களையும் அவமதிப்பதாகும்.

ஓர் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற அந்தஸ்தில் இருப்பவர், இப்படியான விதத்தில் கதைப்பது அழகல்ல. இதற்கு முன்பும் அவர் பல விஷயங்களை பேசியதனூடாக பொறுப்பற்றவராக நடந்து கொண்டிருக்கின்றார். இதனால் அவர் அமைச்சரவைப் பேச்சாளருக்குரிய தகுதியை படிப்படியாக இழந்து வருகின்றார் என்பதுதான் எனது அபிப்பிராயம்.

அமைச்சரவைப் பேச்சாளரென்றால் அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளியில் வந்து தெரிவிப்பவராக அவர் இருக்க வேண்டுமே தவிர, தான் சார்ந்திருக்கின்ற கட்சியின் பேச்சாளராக, தான் நினைக்கின்ற மாதிரி கருத்துக்களை வெளியிடக் கூடாது. ஆனால், அதைத்தான் ராஜித செய்து கொண்டிருக்கிறார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

20ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. உரிய முறையில் கட்சிகளோடு கலந்துரையாடி, ஒரு முடிவை எட்ட முடியாத நிலையில், ஒரு கட்சிக்குள் இருக்கின்ற  கும்பலொன்றின் தேவைக்காக, இந்த நாட்டின் தேர்தல் முறையை மாற்றுவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை.

அது தொடர்பில் இந்நாட்டின் சிறுபான்மையின மற்றும் சிறிய கட்சிகள் 30 க்கும் மேல் ஒன்று கூடியிருக்கின்றோம். எனவே, அவர்கள் நினைக்கின்ற மாதிரி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதென்பது சாத்தியமாகாது.

எனவே, யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு விதமான அடம்பிடிக்கின்ற பாங்கில், அமைச்சர் ராஜித பேசுகின்றமை விசனத்துக்குரிய விடயமாகும்.

எதிர்வரும் 30ஆம் திகதி மகரகமை இளைஞர் சேவைமன்ற கேட்போர் கூடத்தில், நாங்கள் 20ற்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து. 20ஆவது சட்ட திருத்தம் என்கின்ற போலியான, நேர்மையாற்ற பதிய தேர்தல் முறையை ஏன் எதிர்க்கின்றோம் என்பதற்கான மேலும் விளக்கங்களை அளிக்க இருக்கின்றோம். அதன் மூலமாக,  இதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கு பிறகு, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இந்த 20ஆவது சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியாமல் போகும் என்பது தெரிந்திருக்கும். இதற்கு மேலும் தேவையில்லாத விடயங்களைச் சொல்லி பாராளுமன்றத்தை கலைப்பதை தாமதப்படுத்தாமல் உடனடியாக கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அரசியலமைப்புச் சபை உடனடியாக அழைக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதியை மிகவும் அழுத்தமாக வேண்டி நிற்கின்றோம். அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு சபைக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மூவரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் வரை, அந்த நியமனங்கள் செல்லுபடியாகாது என்பதற்கு இருந்த காலக்கெடு இப்பொழுது முடிவடைந்திருக்கின்றது என்ற காரணத்தினால், அவர்களது நியமனங்களும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம், 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையை உடனடியாக சபாநாயகர் கூட்டி, அந்த சபையினூடாக – சுயாதீன ஆணைக்குழுக்களை மற்றும்  நியமனங்களை உறுதி செய்யுமாறு மிக அழுத்தமாக நாங்கள் சபாநாயகரை வேண்டிக் கொள்கின்றோம்.

ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் மக்கள் வழங்கிய ஆணையின் மிக முக்கிய ஓர் அம்சம் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக, 18ஆவது சட்ட திருத்தத்தில் இல்லாமல் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மேற்பார்வையை – அரசியலமைப்புச் சபைதான் செய்ய வேண்டும்.

இந்த அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் – அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்றிருந்த போதிலும், 10 பேரில் 07 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்ததன் மூலம், எதிர்க்கட்சி ஓரளவுக்கு மழுங்கடித்திருக்கின்றது என்ற போதிலும் கூட, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கின்ற அந்தப் பொறுப்பை இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக – யாப்பு சபையைக் கூட்டி, அந்த நியமனங்களை மேற்கொள்ளுமாறு நாங்கள் சபாநாயகரை வலியுத்துவதற்கு இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம்  பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.

இதற்கு மேலும் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டுகிறோம் என்றார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை குறித்து  ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிளித்த அமைச்சர் ஹக்கீம்;

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பொறுத்தவரை, நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை, உரிய அமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னர்தான் – மீண்டும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பொதுநிர்வாக உள்நாட்டல்கள் அமைச்சின் செயலாளர் தடல்லகே அதிலுள்ள நியாயங்களை எங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

அவ்வாறன வர்த்தமானி அறிவித்தலின் பின்னர்தான் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும். அதற்காக நாங்கள் முழு முயற்சி செய்வோம். இதை காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் காரணங்களுக்காக எவர் எதைச் செய்தாலும், சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை நிறுவுகின்ற விஷயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் செயல்படுகின்றது என்ற விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் – சுகாதார ராஜாங்க அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், முத்தலிப் பாவா பாறூக், எம்.எஸ்.எம். அஸ்லம், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குநருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.Hakeem - press con - 222

Comments

புதிது பேஸ்புக் பக்கம்