ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது, பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உதய வீரதுங்க இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உதயங்கவை கைதுசெய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக் கோரிக்கை கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிடியாணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை மட்டுமே வழங்கலாமென குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, வழக்குத் தாக்கல் செய்யப்படாத நிலையில், பிடியாணை பிறப்பிக்க முடியாதெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உதயங்க வீரதுங்க, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக செயற்பட்டிருந்த காலத்தில், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் – இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், உதயங்க வீரதுங்க நாட்டில் இல்லாத காரணத்தால், விசாரணைகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன.
உதயங்க வீரதுங்க தாய்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, தற்போது உக்ரைனில் இருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்திற்கு சென்றிருந்தபோது, உதயங்கவை சந்தித்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, உதயங்க வீரதுங்க மருமகன் முறையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.