தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

🕔 October 17, 2016

protest-076
– முஹம்மட் சுஹைல் –

ண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கடந்த 03 வருடங்களுக்கு மேலாக  இப்பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், கணக்கியல் மற்றும் வணிகக் கல்வி போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவி வருகின்றன. அத்துடன் 15 வருடங்களுக்கும் மேலாக சிங்களம் மற்றும் சித்திர பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இவற்றினைக் கண்டித்தே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

காலை 7.30 மணியளவில் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது மாணவர்கள் பாடசாலைக்குள் செல்லாது நுழைவாயிலுக்கு வெளியில் இருந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இதனையடுத்து பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலைக்கருகே நின்று பாதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

மதியம் ஒன்றரை மணி வரை 06 மணித்தியாலங்கள் தொடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

‘கல்வி அமைச்சரே, மத்திய மாகாண முதலமைச்சரே எமக்கு ஏன் இந்த பாரபட்சம்’ ‘வேண்டும் வேண்டும் கணிதம், விஞ்ஞான ஆசிரியர்கள்  வேண்டும்’ ,  ‘கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனத்தின்போது, எமது பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்காதது ஏன்’, ‘3 வருடங்களாக விஞ்ஞான கணித, ஆசிரியர்கள் எமக்கு இல்லையா?’ ,  ‘எமது கல்வியில் அக்கறை செலுத்தி ஆசிரியர்களை நியமிப்பிர்களா?’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை,  மத்திய மாகாண சபை உறுப்பினரும் பாத்தஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான சாந்தினிகோங்ஹகே அவ்விடத்திற்கு வந்து மாணவர்களினதும் பெற்றோரினத்திம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 10 வருடங்களுக்கும் மேலாக பாரிய ஆசிரியர் வெற்றிடம் நிலவுவதையிட்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். எனினும் இதற்காக மாணவர்களை வீதியில் இறக்குவதை என்னால் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு இந்த கலாசாரம் வேண்டாம். மாணவர்களின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான பொறுப்பை மத்திய மாகாண சபையே ஏற்க வேண்டும்.

நாட்டில் எமது ஆட்சி நிலவினாலும் மத்திய மாகாணத்தில் நாம் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றோம். இந்த விவகாரம் குறித்து நான் முதலமைச்சரின் செயலாளருடன் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை செய்திருக்கிறேன். இதற்கு பாடசாலையின் அபிவிருத்திக்குழுவினர் வரவேண்டும். பாடசாலையின் ஆசிரியர் வெற்றிடத்திற்கான தீர்வை இதன்போது பெறலாம். அத்துடன் நாளை   இடம்பெறும் மாகாண சபை அமர்வின்போது, தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் தேவை குறித்து உரையாற்றுவேன். அத்துடன் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, இவ்வார்ப்பாட்டம் குறித்து பாடசாலை அதிபர் ஐ.எம்.ஜெமீலை தொடர்புகொண்டு வினவியபோது, பெற்றோர்களினாலும் மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, தமது பாடசாலைக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாக கண்டி வலய கல்வி திணைக்களத்திலிருந்து தொடர்புகொண்டு தெரிவித்தனர். அத்துடன் ஏனைய வெற்றிடங்கள் குறித்து உடனியாக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.protest-075

Comments

புதிது பேஸ்புக் பக்கம்