இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

🕔 October 2, 2016

 

rishad-0975
– சுஐப் எம். காசிம் – 

க்களை மீளக்குடியேற்றுவதில் – தான் எதிர்நோக்கும் கஷ்டங்களும், அவமானங்களும் அனேகமானவை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

“றிசாத் பதியுத்தீன் காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார் என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள் வருகின்ற போதும், இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.

மன்னார், மறிச்சுக்கட்டியில் மீளக்குடியேறியுள்ள மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச்சார்ந்த சிலரின் போக்குகளும், செயற்பாடுகளும் அந்த முயற்சியை சிக்கலாக்கும் வகையில் அமையக்கூடாது.

மீளக்குடியேறும் செயற்பாடு என்பது இலகுவான காரியம் அல்ல. அவசர அவசரமாக ஒரேநாளில் மனம்போன போக்கில் செய்யக் கூடிய ஒரு முயற்சியும் அல்ல என்பதை நீங்கள் அனுபவத்தில் அறிவீர்கள்.

வெளிநாட்டு, உள்நாட்டு பரோபகாரிகளினதும், நல்ல மனம் படைத்த தலைவர்களினதும் உதவியினால் இந்தப் பிரதேசத்தில் கட்டித்தரப்பட்ட வீடுகளை, நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். வீடுகளை நீங்கள் பெற்றுக் கொள்வதில் காட்டிய ஆர்வமும், அக்கறையும் அதனைத்  தொடர்ந்து பராமரிப்பதிலும், உபயோகிப்பதிலும் காட்டுகின்றீர்களா? என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

புத்தளத்திலும், தென்னிலங்கையிலும், ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகள் வடமாகாணத்துக்கு வந்து, தமது பிரதேசத்தில் மீளக்குடியேறுவதற்கு காணிகள் இன்றி, வீடுகள் இன்றி அவதியுறுவதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பிரதேசத்தில் குடியேறுவதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுகின்ற போதும், இவ்வாறான காரணிகளால் வரமுடியாது திண்டாடுகின்றனர். எனவே இங்குவர எண்ணுபவர்களுக்கு நீங்களும் உதவ வேண்டுமென நான் அன்பாகக் கோருகின்றேன்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாம், தென்னிலங்கையில் ஏதோ எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் காலூன்றி வாழ்வதால், திடீரென எடுத்த எடுப்பில் அவற்றைப் போட்டுவிட்டு இங்கு வருவதென்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். என்றாலும் நமது பூர்வீக இடங்களை இழந்து விட முடியாது. இங்கே வந்து வாழ்வதில் பல உடனடி சிக்கல்களுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடுகின்றது என்பது உண்மைதான். நமது பிள்ளைகளின் கல்வி ரீதியான பிரச்சினை, தொழில் சார்ந்த பிரச்சினை, குடிநீர்த் தட்டுப்பாடு, வாழ்வாதாரத்துக்கான வசதிகள் இல்லாத குறை, சுகாதாரப் பிரச்சினைகள் என்பவற்றினால் தென்னிலங்கையில் இருந்து மீளக்குடியேறுவதற்கு ஆர்வம் குறைந்தவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். எனினும் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இருந்து விடவும் கூடாது.

இந்தப் பிரதேசத்துக்கு வந்துள்ள பரோபகாரிகளும், தனவந்தர்களும் உங்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்களாக இருந்த போதும், சகோதர பிணைப்பினால்  உங்களுக்கு உதவ முன்வந்திருக்கின்றார்கள். 1990 ஆம் ஆண்டு நாங்கள் தென்னிலங்கையில் நாடோடிகள் போல வந்து மரநிழல்களிலும், பாடசாலை, கோயில்கள், பள்ளிவாசல்களிலும் தஞ்சமடைந்திருந்த போது, உங்களுக்கு இவர்களும் உதவியிருக்கிறார்கள். புத்தளம் வாழ் சமூகத்தையும், தென்னிலங்கையில் உள்ள ஏனைய பரோபகாரிகளையும், அவர்கள் நமக்குச் செய்த உதவிகளையும் நாம் என்றும் மறப்பதற்கில்லை. இந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு நான் மீண்டும் எனது இதயபூர்வமான நன்றிகளை உங்கள் சார்பில் தெரிவிக்கின்றேன்.

இஸ்லாம் கற்றுத் தந்த வழியில், குர்ஆன் காட்டிய போதனையில், பெருமானாரின் அதி சிறந்த வழிகாட்டலில்,“இல்லாதவர்களுக்கு உள்ளவர்கள் உதவ வேண்டும்” என்ற உயரிய எண்ணத்தில் இங்கு இவர்கள் இவ்வாறான காரியங்களை மேற்கொள்கின்றார்கள. சமூகத்தின் மீதுள்ள பாசமும், நேசமும் அவர்களை இங்கு வர செய்திருக்கின்றது.

ஆனால், நம்மில் சிலரின் நடத்தைகளும், பண்புகளும் இதற்கு மாறுபட்டவையாக இருப்பதுதான் எனக்கு வேதனை தருகின்றது. அகதி ஒருவர் நமது அண்டை வீட்டுக்கு வரும்போது, அவர்களுக்கு உதவி செய்யாத, ஏறெடுத்தும் பார்க்காத நிலையை நாம் காண்கின்றோம். நாங்கள் மட்டும்தான் வாழ வேண்டும், நாங்கள் மட்டும்தான் உதவி பெற வேண்டும் என்ற மனோ நிலையை நாம் மாற்றாத வரையில், இந்த அகதிச் சமூகத்தின் தலை விதியை யாராலும் மாற்ற முடியாது.

இந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் நாம் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்களும், அவமானங்களும் அனேகம். ‘காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார்’ என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். எனக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு நீதிமன்றம் ஏற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நான் இருக்கின்றேன். இத்தனைக்கும் இந்தப் பிரதேசத்தில் எனக்கு ஒரு பேர்ச் காணிகூட இல்லை. உங்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள் வருகின்ற போதும், நான் அவற்றை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்.

எனது அரசியல் எதிரிகளும், நமது சமூகத்தைச் சார்ந்த என்மீது காழ்ப்புணர்வு கொண்ட அரசியல்வாதிகளும் இந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், என்னை மட்டும் பழி சுமத்துவதை தமது தொழிலாக கொண்டுள்ளனர்.

எனவே மீள்குடியேற்றுவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பரோபகாரிகளின் உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களையும், கட்டடங்களையும் பராமரிக்கும் பண்பு உங்களிடம் வரவேண்டும். “நமது மூதாதையர் வாழ்ந்த பூமி இது” என்ற உணர்வுடன் நீங்கள் செயலாற்றுவதன் மூலமே இதில் உண்மையான வெற்றி கிடைக்கும்.

மீளக்குடியேற்றிய மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், அவர்களின் குடிநீர் தேவைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை நாம் செயற்படுத்த உள்ளோம் என்பதை நான் மிகவும் சந்தோஷமாக கூற விரும்புகிறேன்” என்றார்.rishad-0976

Comments