தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை
🕔 September 30, 2016


– றிசாத் ஏ காதர் –
ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது.
இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள் கலந்து கொண்டர்.
அஷ்ரப் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களை, 2011 ஆம் ஆண்டு அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய ராணுவத்தினர், அங்கு முகாம் அமைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் இந்த மக்கள், ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பினால் தமது தொழிலினையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக, வாழ்விடங்களை இழந்த இந்த மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
இது தொடர்பில், அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்து, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிய போதும், இதுவரையில் தமக்கு – உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த நல்லாட்சியிலாவது ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளிலிருந்து ராணுவத்தினரை வெளியேற்றுவதோடு, உரியவர்களிடம் காணிகளை ஒப்படைக்குமாறு, கவன ஈர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments

