லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனது வீட்டில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார், இதன்போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ராஜபக்ஷவினருக்குத் தொடர்பில்லை என, சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
மட்டுமன்றி பிரதி அமைச்சரின் கருத்துக்குத் தடை ஏற்படுத்தும் வகையிலும், அந்த ஊடகவியலாளர் செயற்பட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரதி அமைச்சர் “ஊடகவியலாளர் ஒருவரை நாயை போன்று கொலை செய்தார்கள், அப்போது சத்தம் இல்லாமல் இருந்தவர்கள் தற்போது கூச்சலிடுகின்றார்கள். இவ்வாறானவர்கள் ஊடகவியலாளர்களா” என கோபமாகக்க கூறியதோடு, மேற்ப ஊடகவியலாளர் சந்திப்பினையும் நிறுத்தினார்.
குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து அவர் பணியாற்றும் ஊடக நிறுவனத்தில் பல முறை எச்சரிக்கைக்கு உட்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.