கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம்

🕔 September 27, 2016

Mansoor - 0123– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இம் மாகாணத்திலிருந்து மிகக் குறைந்தளவு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடான  நிலையானது தவிர்க்கப்படல் வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வருடமும் பல்வேறு கோரிக்கைள் சமர்ப்பிக்கப்பட்டன. அவை தொடர்பில் எந்தவி நடவடிக்கையினையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. இது கவலைக்குரியது.

இறக்காமம் கோட்டப் பாடசாலைகளில் கணிசமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் கல்விக் கல்லூரியின் ஆணையாளருக்கு கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி EP/20/01/05 எனும் இலக்க கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். அதன் பிரகாரம் 09 பாடநெறிகளுக்கு 35 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், இறக்காமம் கோட்டத்தில் ஒரேயொரு ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இறக்காமத்திலிருந்து தேசிய கல்விக் கல்லூரிக்கு ஒருவரை மாத்திரமே உள்ளீர்ப்புச் செய்யமுடியும் எனவும் அவ் வர்த்தமானி அறிவிப்பு குறிப்பிடுகின்றது.

பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்துவிட்டு, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி – உயர்ந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் எதிர் காலத்தின் மீது, இருளை ஏற்படுத்துவதனை அனுமதிக்க முடியாது.  எனவே, தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கின்றமை தொடர்பில், தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும்.  தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு திறமையுள்ள, அதிகமான மாணவர்களை கடந்த காலங்களைப்போன்று உள்ளீர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்குமாகாண பாடசாலைகளில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில், தேசிய கல்விக் கல்லூரியின் ஆணையாளருக்கு கல்விப் பணிப்பாளர் தெரியப்படுத்தியும், அவ்வெற்றிடங்களுக்கு ஏற்ப, மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்படாமையானது, அநீதியான செயற்பாடாகும்.

கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள 18 தேசிய கல்விக் கல்லூரிகளிலும் எவ்வித வேறுபாடுகளுமின்றி, உயர்தரப் பரீட்சையில் பெற்ற வெட்டுப்புள்ளிகளை மாத்திரம் கவனத்திற் கொண்டு மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டனர்.  இதனால், யாரும் தேசிய கல்விக் கல்லூரிக்கான மாணவர் அனுமதியினை கேள்விக்குட்படுத்தவில்லை.

ஆனால், கடந்த ஓரிரு வருடங்களில் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய நடைமுறையானது – கஷ்டப்பட்டு படித்தும், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான நல்லதொரு வாய்ப்பினை இல்லாமல் செய்கிறது.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கேற்ப, கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கத் தவறும் பாரபட்சம் தொடர்பில், கிழக்குமாகாண ஆளுநருக்கு தெளிவுபடுத்தவுள்ளேன்.

அது மாத்திரமன்றி, கல்விக் கல்லூரிப் படிப்பினை நிறைவுசெய்த, இறக்காமம் பிரதேசத்தவர்கள் சிலருக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை.

இதேவேளை, கல்விக் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, அவர்களின் பிரதேசத்திலேயே நியமனங்களை வழங்க வேண்டும் எனக் கோரி, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அண்மையில் கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணையொன்றினை முன்வைத்திருந்தார். அவருக்கு இந்த இடத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்