சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு
தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார்.
மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ இன்றி, சிறையினுள் இருக்கும் ஒருவர் எவ்வாறு, அவரின் பேஸ்புக் பக்கத்தை செயற்படுத்த முடியும் என கேட்டுள்ள ஹிருணிகா, சிறையிலிருப்பவர்களின் பேஸ்புக் பக்கத்தை, வெளியிலிருக்கும் ஒருவர் கூட செயற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் முறையானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஹிருணிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.எப். பண்டார மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோரின் பேஸ்புக் பக்கங்களே இவ்வாறு செயப்படுத்தப்படுவதாக ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எப். பண்டார, கடந்த 12 ஆம் திகதி முதல், அவரின் பேஸ்புக் பக்கத்தை செயற்படுத்தி வருகின்றார். அதேபோன்று, தெமட்டகொட சமிந்த – சமி ஆகாஷ் எனும் பெயரில் பேஸ்புக் பக்கத்தை செயற்படுத்தி வருகின்றார் என்றும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக் பக்கத்தை, சில வாரங்களுக்கு முன்னராக, அவருடைய தங்கை செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.