ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் – குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அணுசரனையுடன் வழங்கப்படும் இந்தப் பேரீச்சம் பழங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு, முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஏ.சி முபீனின் அயராத முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் – பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 450 முஸ்லிம் மாணவர்களுக்கு, இப் பேரிச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில், ‘புதிது’ செய்தித் தளம் – செய்தி வெளியிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.
தொடர்பான செய்தி: பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு