மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இவரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தொடர்ந்தும் இவரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தது.
இதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் மேலும் 06 குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர். இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வீடொன்று உள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். குறித்த வீட்டினைக் கொள்வனவு செய்வதற்கு, தனது சகோதரர் பணம் வழங்கியதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறிய போதிலும், அதற்கான பதிவுகள் எவையும் இல்லை என்று, குற்றப் புலனாய்வுத் தினைக்களத்தினர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
நபரொருவர் வெளிநாட்டில் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றங்கள் குறித்து, அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்த வேண்டுமென சட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை, நாடாளுமன்ற உறுப்பினரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.