காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்
🕔 September 21, 2016
– றிசாத் ஏ காதர் –
வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது.
சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனைக்கு அமைவாக, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய்க்கான வைத்தியப் பிரிவினால் ஆயுர்வேத வைத்திய முகாம்கள், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வைத்திய முகாம், காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
ஆயுர்வேத விசேட வைத்திய நிபுணர்களைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த வைத்திய முகாமில், கொரியாவைச் சேர்ந்த அக்குபஞ்சர் விசேட வைத்திய நிபுணர் கலந்து கொண்டு சிகிச்சை வழங்கியமை விசேட அம்சமாகும்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம். முபீன், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல். நக்பர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த வைத்திய முகாம் நடைபெற்றது.
இவ் வைத்திய முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்த இலவச வைத்திய சேவை முகாமில் பஞ்சகர்ம வைத்திய சேவை, பொதுநோய் வைத்திய சேவை மற்றும் அக்குபஞ்சர் வைத்திய சேவை என்பன வழங்கப்பட்டன.
இலங்கையில் முதன் முதலாக ஆயுர்வேத வைத்தியத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன மருத்துவக் கருவியினை உபயோகித்து உடற்பரிசோதனை சிகிச்சை வழங்கப்பட்டமை, இந்த வைத்திய முகாமின் விசேட அம்சமாகும்.
வைத்திய முகாமின் இறுதியில், சுகாதார பிரதியமைச்சர் மற்றும் சேவையாற்றிய வைத்தியர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.