ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கு ஏறாவூர் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.
இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றினுள் நூர் முஹம்மது சித்தி ஜனீரா என்ற 55 வயதான தாயும் அவரது 34 வயது மகள் ஜனீரா பானு மாஹிர் என்பவரும் கடந்த 10 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 34 வயதான பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.