விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர
இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு பாதகமான முறையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் அது பற்றி இந்த இருவரிடம் விமல் வீரவன்ச கேட்டு அறிந்து கொள்ள முடியும் அமைச்சர் கூறினார்.
ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் கற்றுக்கொள்ளாதவற்றை கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த தேரரிடம் கற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான நபர்களின் அறியாமை குறித்து அனுதாபம் கொண்டு உண்மையை தெளிவுபடுத்திய மல்வத்து பீடாதிபதிக்கு எனது மரியாதையை செலுத்துகின்றேன்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்றில் கற்றுக்கொள்ளாத பாடங்களை விமல் வீரவன்ச மல்வத்து பீடாதிபதியிடம் கற்றுக்கொண்டுள்ளார்.
உருவாக்கப்படாத ஓர் அரசியலமைப்புப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை செய்வதன் மூலம், ஐ.தே.கட்சியுடன் விமல் வீரவன்ச தரப்பினர் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டை, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்கின்றது. இதன் மூலம் இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது.
அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
நாட்டுக்கு பாதகமான முறையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால், அது பற்றி இந்த இருவரிடமுமே விமல் வீரவவன்ச கேட்டு அறிந்து கொள்ள முடியும். மாறாக அரசாங்கத்தை திட்டி நாட்டை சுற்றி பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை.
கடந்த காலங்களிலும் தற்போதும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு, விமல் வீரவன்ச போன்ற தரப்பினரே காரணமாக இருந்து வருகின்றனர்” என்றார்.