இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’

🕔 September 15, 2016

article-rishad-00011– றிசாத் ஏ காதர் –

திருமணம் – ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்தினால்தான் வாழ்க்கை பூரணப்படுகிறது. இஸ்லாத்திலும் திருமணம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், திருமணத்துக்கென்று சில சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், ஒழுக்கங்களும் உள்ளன. திருமணத்துக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வயதெல்லை உள்ளது. உடலும், மனமும் திருமணத்துக்குத் தயாராகும் போதுதான் அது நிகழ வேண்டும். ஆனால், தற்காலத்தில் இளவயதுத் திருமணங்கள் கணிசமாக நடந்தேறுகின்றன. அதனூடாக ஏற்படுகின்ற கர்ப்பம் மற்றும் கருச்சிதைவுகள் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.

சட்டம், மதநம்பிக்கை மற்றும் சமூக அமைப்பு போன்ற விடயங்களால் தீர்மானிக்கப்பட்டு வந்த திருமண நடைமுறைகளில், தற்போது வேறுபல விடயங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பொருளாதார தேடலில் மனிதன் முற்றுமுழுதாக மூழ்கத் தொடங்கியமையினால், திருமணத்துக்கான விதிகளும், தகைமைகளும், அடிப்படைகளும் சிதையத் தொடங்கின.

இள வயதுத் திருமணத்தினால் ஏற்படுகின்ற கர்ப்பங்கள் வீரியமற்றவையாகக் காணப்படுகின்ற. சிலவேளை, அந்தக் கர்ப்பத்தினால் மரணங்களும் நிகழ்கின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனையில் இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூசா நக்பர் தெரிவிக்கின்றார்.

19 வயதுக்குக் குறைவானவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் – இளவயதுத் திருமாணமாகக் கொள்ளப்படுகின்றன. இள வயதுத் திருமணங்கள் சமூகத்தில் தற்போது வேகமாக பரவி வருவதாக டொக்டர் பறூசா நக்பர் கூறுகின்றார்.

தாய், தந்தை இருவரும் வெளிநாடு செல்கின்ற போது, தமது பெண் பிள்ளைகள் பராமரிப்பின்றியும், பாதுகாப்பற்ற நிலையும் இருக்க நேரிடும் என்பதனால், அந்தப் பிள்ளைகளின் இளவயதுகளையும் கருத்திற்கொள்ளாமல், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற அவலம் கணிசமாக நடந்தேறி வருகின்றமையினை டொக்டர் பறூசா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெற்றோர் வெளிநாடு சென்ற பின்னர் தனியாக வாழ நேரிடும் பிள்ளைகள், காதல் வயப்பட்டு அதனூடாக இளவயதுத் திருமணங்களைச் செய்து கொள்வதாலும், இளவயதுத் திருமணங்கள் அதிகரிக்கின்றமைக்கு மற்றொரு காரணமாகும்.

திருமணத்தின் போது, பெண் தரப்பாரிடம் சீதனம் எனும் பெயரில் சொத்து, பணம் ஆகியவற்றினை ஆண் தரப்பார் பெற்றுக் கொள்ளும் அவலம், இன்னும் கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. சீதனம் கொடுத்து தமது பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர் அதிகமாக உள்ளனர். அவர்கள் தமது பெண் பிள்ளைகளை சீதனமின்றி திருமணம் முடிப்பதற்கு தயாராக உள்ள ஆண்களுக்கு, இளவயது என்றும் பாராமல் திருமணம் முடித்துக் கொடுத்து விடுகின்றனர்.

இளவயதுத் திருமணத்தின்போது உருவாகும் கர்ப்பத்தினால் பெண்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். உடல் ரீதியாக முதிர்ச்சியற்றதொரு வயதில் ஏற்படும் கர்ப்பம் காரணமாக, கருச்சிதைவு ஏற்படுவதோடு, தாயும் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இவ்வாறான திருமணங்கள் மூலம் கிடைக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கான முதிர்ச்சி கூட, இளவயதுத் தாய்களுக்கு இருப்பதில்லை. அதனால் தாயின் தாயார் அல்லது நெருங்கிய உறவினர்கள்தான் குழுந்தைகளைப் பராமரிக்கும் நிலை ஏற்படுகிறது.. இதனால் குழந்தைக்கு அள்ளி அணைத்துக் கொடுக்கப்படவேண்டிய அன்பு கிடைப்பதில்லை.

ஆகவே, இளவயதுத் திருமணங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். இன்னொருபுறம், தவிர்க்க முடியாமல் நடந்து முடியும் அவ்வாறான திருமணங்களின் போது, குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் திட்டமிடலைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். இல்லாது விட்டால், அதுவே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுவாக குடும்ப திட்டமிடல் என்பது – எல்லோருக்குமானது என்கின்றார் டாக்டர் பறூசா நக்பர். ஆனால் அதனை கணிசமானோர் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். குடும்பத் திட்டமிடல் என்பது, பெற்றுக் கொள்ளும் பிள்ளைகளின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துதல் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

‘தம்பதியினர் – விரும்பிய எண்ணிக்கையான குழந்தைகளை விரும்பிய காலத்தில், பொருத்தமான இடைவெளியில் பிரசவித்துக்கொள்ளமுடியும்’ என்று கூறும் டொக்டர் பறூசா, தாய் – சேய் ஆரோக்கியமே இங்கு முக்கியம் என்கிறார்.

குழந்தை பிறந்து இரண்டு வருடத்துக்கு கட்டாயமாக தாய்பால் ஊட்டப்பட வேண்டும், இஸ்லாமும் அதனை வலியுறுத்துகின்றது. அப்போதுதான் குழந்தையினுடைய ஆரம்ப வளர்ச்சி பரிபூரணமடையும். இந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்தல், பாலூட்டும் குழந்தைக்கான அரவணைப்பிலும், அதன் ஆரம்ப வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரண்டு பிரசவங்களுக்கிடையிலான இடைவெளி ஆகக்குறைந்தது 03 வருடமாக இருத்தல் வேண்டும் என்றும் இதன்போது அவர் வலியுத்தினார்.

திட்டமிடாமலும், பராமரிக்க முடியாத வகையிலும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதானால், பிள்ளைகளுக்கு தாய்பால் ஊட்டுவதிலிருந்து, குழந்தைக்கான தாயன்பினை வழங்குவது வரை – பல்வேறு பிரச்சிகள உருவாகின்றன. இதனால், தாய் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலை உருவாகிறது.

குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதென்பது – நமது கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதாகும். அவை ஆரோக்கியமானதாக அமைகின்ற போதுதான் எமது கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கமுடியும்.

எண்ணிக்கையின் அடிப்படையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதனால் சாதித்துவிடப்பபோவது எதுவுமில்லை.

வாழ்வில் அநேகமான விடயங்களைத் திட்டமிட்டுக்கொள்ளும் நம்மில் அதிகமானோர் திருமணம், அதன் பின்னரான குழந்தைப்பேறு எவ்வாறு அமைய வேண்டும் என்கின்ற விடயங்களை முறையாகத் தீர்மானிப்பதில் தோற்றுப் போய் விடுகின்றோம்.

நன்றி: விடிவெள்ளி (15 செப்டம்பர் 2016)

Comments