வேட்டையாடப்பட்ட கனவு
– முகம்மது தம்பி மரைக்கார் –
ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில் சிறுபான்னையிலும், சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன், ஓர் ஆட்சியை அமைத்துக் காட்டுவதற்கான அரசியல் இறுமாப்பு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
ஆனால், முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரப் என்கிற, அந்த மனிதனுக்கு மேலே சொன்னவையெல்லாம் சாத்தியமானது. ஏராளமானோரின் முடியாமைகள், அவரால் முடிந்தது. அஷ்ரப் ஒன்றும் அதிசயப் பிறவியல்ல. ஆனால், அவரின் அரசியல் என்னவோ – அதிசயமானதாகவே இருந்தது – இன்னும் இருக்கிறது.
மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மறைந்து – எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. பிரதிநிதித்துவ அரசியலில் உயர உயரப் பயணித்துக் கொண்டிருந்தவர், உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் தனது கடைசி மூச்சை இழந்தார். வழிகாட்டுவதற்கு யாருமற்ற மந்தை போல், அரசியலில் இலக்குகளற்றுப் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூத்தின் மேய்ப்பராக அவர் இருந்தார். எதிர்பாராத ஒரு நாளில், ஆடுகள் திடீரென மேய்ப்பரை இழந்தன.
மேய்ப்பரற்ற ஆடுகள் பாவப்பட்டவை. கொடிய மிருகங்கள், வேட்டைக்காரர்கள், திருடர்களென்று – திரும்பும் திசையெல்லாம் ஆடுகளுக்கு ஆபத்துக்கள்தான். அஷ்ரப்பை இழந்த முஸ்லிம் சமூகமும், அரசியலில் அவ்வாறான ஆபத்துக்களை அனுபவித்துக் கொண்டுதான் வருகின்றன. போதாக்குறைக்கு, இப்போது ஏராளமான மேய்ப்பர்கள் களத்தில் குதித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மேய்ப்பரும், அஷ்ரப்பின் ஆத்மா – தனக்குள் மட்டுமே குடியிருப்பதாகக் கூறிக் கொள்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தை ஓர் இலக்கு நோக்கி மேய்ப்பதற்காக, அரசியல் என்கிற தடியை அஷ்ரப் கையிலெடுத்தார். ஆனால், இப்போது துரதிஷ்டவசமாக தடியெடுத்தவர்களெல்லோரும், முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்களாகத் தொடங்கி விட்டனர்.
அஷ்ரப்பின் தடி அசைவுக்குக் கட்டுப்பட்ட ஆடுகளை, அவரின் மரணத்தின் பின் வந்த மேய்பர்கள் – பங்கு போட்டுக் கொண்டு பிரித்தெடுத்துச் சென்றனர். முஸ்லிம் அரசியல் – போகின்ற போக்கைப் பார்த்தால், ஆடுகளை விடவும் மேய்ப்பர்கள் அதிகமாகி விடுவார்களோ என்று அஞ்சத் தோன்றுகிறது. ஆடுகளின் நலன்களுக்காக அஷ்ரப் அரசியல் சண்டை போட்டார். இப்போது, ஆடுகளைப் பங்கு போடுவதிலேயே மேய்ப்பர்களின் சண்டைகள் முடிந்து விடுகின்றன.
முஸ்லிம்களை அரசியல் ரீதியாகக் காப்பாற்ற வேண்டுமென்று, அஷ்ரப் கட்சியமைத்தார். இப்போது கட்சியைக் காப்பாற்றுவதென்பதே கஷ்டமாகப் போயுள்ளது. அஷ்ரப்பின் பலவீனங்கள் கூட, அவரின் பலமாகத் தெரிந்தன. அப்படியொரு ஆளுமை அவருக்கு இருந்தது. ஆனால், பின்னர் வந்த மேய்ப்பர்களின் பலங்கள் கூட, பலவீனங்களாகின.
உண்டியல் குலுக்கி, அதன் மூலம் பெற்றுக் கொண்ட நிதிகளைக் கொண்டு, முஸ்லிம்களுக்கான கட்சியினை வளர்த்தெடுத்தார் அஷ்ரப். பின்னர் வந்த மேய்ப்பர்கள், கட்சியை வைத்து காசு பார்க்கத் தொடங்கினார்கள். தனது சொத்துக்களை கட்சிக்காக அஷ்ரப் எழுதி வைத்தார். பின்னர் வந்த மேய்ப்பர்கள் கட்சியை தமது சொத்தாக்கிக் கொண்டார்கள்.
இன முரண்பாடுகளுக்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போது, முஸ்லிம்கள் சார்பில் எதையெல்லாம் கோரவேண்டும் என்கிற திட்டம் அஷ்ரப்பிடம் இருந்தது. முஸ்லிம்களுக்கென்று ஓர் அலகு – அவரின் கனவாக இருந்தது. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரைக் கூட, அமர்த்த முடியாத இழிநிலையில்தான், பின்னர் வந்த மேய்ப்பர்களின் அரசியல் உள்ளது.
எந்த ஆட்சியிலெல்லாம் அஷ்ரப் இணைந்திருந்தாரோ, அந்த ஆட்சியாளர்களையெல்லாம் அஷ்ரப் ஆட்டுவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரின் வாரிசுகளாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள், ஆட்சியாளர்களின் பொம்மைகளாக மாறினார்கள். சில – பேசும் பொம்மைகள். சில – பேசா பொம்மைகள்.
அஷ்ரபின் மரணம் மர்மமானது என்கிறார்கள். அவரின் கட்சிக்காரர்களுக்கும் அந்தச் சந்தேகம் இன்னுமுள்ளது. ஆனால், அவரின் பின்வந்த மேய்ப்பர்கள் எவரும், அதுகுறித்து வாய் திறக்க வேண்டிய இடத்தில், திறந்ததாக வரலாறு இல்லை. தேர்தல் காலங்களிலும், கட்சிக்குள் பிளவுகள் பிறக்கையிலும் மட்டும், அஷ்ரப்பின் மரணத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் வியாபாரம் சூடுபிடிக்கும். ‘காரியம்’ முடிந்ததும் காணாமல் போய்விடும்.
கட்சியை – ஓர் ஆல மரமாய் அஷ்ரப் வளர்த்தெடுத்தார். ஆனால், அவரின் மரணத்தின் பின்வந்தவர்கள், கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ‘நான் எனும் நீ’ என்று, அஷப்ரப் யாரையோ கூறினார். (‘நான் எனும் நீ’ என்பது அஷ்ரப் எழுதிய கவிதையொன்றின் தலைப்பு. பின்னர், அவர் வெளியிட்ட கவிதை நூலுக்கும், அதுவே – தலைப்பாக இடப்பட்டது) அவரின் மரணத்தின் பின்னர்தான் அறிய முடிந்தது. நானும் – நீயும் அவராகவே இருந்தார்.
1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சம்மாந்துறையில் அஷ்ரப் பிறந்தார். தாய் சம்மாந்துறை, தந்தையின் ஊர் கல்முனை. அஷ்ரப் இப்போதும் உயிருடன் இருந்தால், 68 வயதுதான் அவருக்கு ஆகியிருக்கும். ஆனால், 52 வயதிலேயே மரணத்தின் இரக்கமற்ற விரல்கள், அவரைப் பறித்தெடுக்துக் கொண்டது. 70 வயதுகளுக்குப் பின்னரும், புதிய கட்சி ஆரம்பித்து, ஆட்சி பிடிக்கும் ஆசையில் பலர் இங்கு உலவிக் கொண்டிருக்கையில், முஸ்லிம் சமூகத்துக்கென்றிருந்த அந்த ஒற்றை நம்பிக்கையை காலம் களவாடிச் சென்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியலை, உயரத்துக்குக் கொண்டு சென்றவர் அஷ்ரப். அவருடைய நாகரீக அரசியலால் முஸ்லிம் சமூகம் கௌரவம் பெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினரும் அவரின் உரையை ரசித்தார்கள். ஆனால், அவரின் ஆத்மாவினைச் சுமந்து வந்ததாகச் சொல்லிக் கொண்டவர்களின் அரசியலால், முஸ்லிம் சமூகம் வெட்கித்து நிற்கிறது. அரசியல் தெருக்களில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இப்போதின் முஸ்லிம் தலைவர்கள்.
அஷ்ரப்பின் சிஷ்யர்களாகச் சொல்லிக் கொள்கின்றவர்களிடம், அஷ்ரப்பின் பாடங்கள் எவையுமில்லை. அஷ்ரப் எவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்கவில்லையோ, அவற்றினைத்தான் சிஷ்யர்கள் கற்றுக் கொண்டனர். அஷ்ரப்பின் சிஷ்யர்களுக்கு, அவரின் பெயரும், உருவமும் வியாபார முத்திரைகளாக உள்ளன. அஷ்ரப் என்கிற முத்திரை குத்தப்பட்ட ‘பொருட்களுக்கு’ முஸ்லிம் அரசியல் அரங்கில் நல்ல விலை. அதனால், தரமற்ற பொருட்களுக்கும் ‘அஷ்ரப்’ என்கிற முத்திரையைக் குத்தி விடுகின்றனர். தட்டிக் கேட்கத்தான் எவருமில்லை.
அஷ்ரப்பின் மரணத்தின்போது முஸ்லிம் சமூகம் வடித்த கண்ணீரின் ஈரம், இன்னும் காயவில்லை. இழந்திருக்கக் கூடாததொரு காலத்தில், அஷ்ரப்பை முஸ்லிம் சமூகம் இழந்தது. ஆனால், அவரின் ஆத்மாவைச் சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சிலருக்கு, அஷ்ரப்பின் மரணம் – அதிஷ்டமானது. அவர்களின் ‘நப்சு’களுக்கு அந்த மரணம் தீனியிட்டது. (நப்சு என்கிற அரபுச் சொல்லுக்கு, தமிழில் மனம் என்று அர்த்தமாகும்). அதனால்தான், அஷ்ரப்பின் மரணத்திலுள்ள மர்மங்களை அகற்றிப் பார்ப்பதற்கும், அவர்கள் அக்கறைப்படவில்லை.
முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்கிற லட்சியத்தோடு பயணித்த அஷ்ரப்பின் சிஷ்யர்கள், ஆளாளுக்குப் பிரிந்து நிற்கின்றார்கள். இது, காலத்தின் முரண்நகையாகும். அரசியல் ரீதியாக தனது சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு தலைவரின் நினைவு நாளில், அவருடைய சிஷ்யர்களாகச் சொல்லிக் கொள்கின்றவர்கள் பிரிந்து நின்று, அவருக்காகப் பிரார்த்திக்கப் போகிறார்கள். இவர்கள் தொடர்பில், அஷ்ரப்பின் ஆத்மா சாந்தியடையப் போவதில்லை. அஷ்ரப்பின் கனவை, அவரின் சிஷ்யர்களே வேட்டையாடி விட்டனர்.
அஷ்ரப் – இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தலைவனாக இருந்தார். கிழக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் தந்தையாக இருந்தார். தந்தையின் இழப்புத் துயரை, பிள்ளைகளே ஆழமாக அறிவர்.
முஸ்லிம் சமூகம் தொடர்பில் அஷ்ரப் கண்ட கனவு இன்னும் பலிக்கவில்லை. வேட்டையாடப்பட்ட அந்தக் கனவு, குற்றுயிராக எங்கோ ஒளிந்து விட்டது. அந்தக் கனவைக் காப்பாற்ற வேண்டிய தேவை, ‘தந்தை’யின் பிள்ளைகளுக்குள்ளது.
அஷ்ரப் என்கிற நாமமும், அவரின் உருவமும் மட்டுமே, முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த அரசியல் வியாபாரிகளிடம் முஸ்லிம் சமூகம் தன்னை மேய்பதற்கான தடியைக் கொடுத்து விட முடியாது. கொஞ்சக் காலத்துக்கு, முஸ்லிம் சமூகம் தன்னைத் தானே மேய்த்துக் கொள்ள வேண்டியதொரு கட்டாயத்தில் உள்ளது. இன்னுமொரு அஷ்ரப் வருவதற்கு நாளாகும். அஷ்ரப்பின் ஆத்மாவை உண்மையாகவே சுமந்து கொண்டிருக்கும், ஒரு அரசியல் தலைமையினையாவது அடையாளம் கண்டுகொள்ளும் வரை, மந்தையாகவும், மேய்ப்பராகவும் முஸ்லிம் சமூகம் இருந்தே ஆகவேண்டும்.
வழி தவறுபவரே, வழி காட்டுகின்றவராகவும் இருப்பது அத்துணை இலகுவானதல்ல.
நன்றி: தமிழ் மிரர் (13 செப்டம்பர் 2016)