ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில்

🕔 September 10, 2016

 

ranil-01க்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு ஏராளமான நல்லவற்றினைச் செய்துள்ளபோதும், கட்சி எனும் வகையில், தாம் தவறான முடிவுகள் பலவற்றினை எடுத்திருந்ததாகவும் அவர்  சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்தார். அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டின் கடன் சுமையை 2020ம் ஆண்டாகும் போது குறைப்போம். ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம். இந்தக் கடன் சுமையை எமது காலத்திற்குள்ளேயே நாங்கள் செலுத்தி முடிப்போம். இவ்றை நாம் பிரிந்து நின்று நிறைவேற்ற முடியாது.

நாங்கள் அரசியல் தீர்வை நோக்கி செல்ல வேண்டும். அதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம். இது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானங்கள் இல்லை. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள்தான் இடம்பெற்று வருகின்றன. பின்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்க அறிக்கை சமர்பிப்போம். நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால்தான் அதனை சட்டமூலமாக சமர்பிப்போம்.

அனைத்து மதம் மற்றும் இனத்தவர்கள் தொடர்பிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் அனைவரும் தேசத்தை நேசிப்பவர்கள். ஆனால் சிலர், விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்தவர்களை தேசாபிமானிகள் என்கிறார்கள்.

பண்டாரநாயக்க உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் தேச துரோகிகள் என்கிறார்கள். பிரபாகரன் உருவாக்கிய விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்களை தேசாபிமானிகள் என்கிறார்கள்.

யார் தேச துரோகிகள் என்று இப்போது மக்கள் தீர்மானிக்கலாம். அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஐக்கிய தேசியயக் கட்சிக்காரன் எனும் வகையில் நான் பெருமையடைகிறேன். நாட்டுக்காக ஐ.தே.கட்சி நிறைய நல்லவற்றினைச் செய்திருக்கிறது. அதேவேளை, கட்சி எனும் வகையில் நாங்கள் தவறான முடிவுகளை எடுத்திருக்கின்றோம். ஐ.தே.கட்சி செய்த தவறுகளுக்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன்.

பழையவற்றினைப் பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல. நாடு என்கிற வகையில் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்.  ” என்றார்.

Comments