இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ்
🕔 September 9, 2016
– றிசாத் ஏ காதர் –
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்ததாக இலங்கையினுடைய வரலாற்றில் எங்குமே காண முடியாது. கிழக்கு மாகாணம் – கண்டி ராச்சியத்துடன் இணைந்தமையினைத்தான் வரலாற்றில் காண முடிகின்றது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான எம்.எம். பஹீஜ் தெரிவித்தார்.
‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில், கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம் – மூதூரில் டொக்டர் வை.எஸ்.எம். சியா தலைமையில் வெள்ளிக்கிழமை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, சட்டத்தரணி பஹீஜ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“இலங்கையை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலங்களிலும், மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களிலும் கூட, வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைந்திருக்கவில்லை.
பிரித்தானியர்களின் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை 05 மாகாணங்களாக இருந்தது. அதன்போதும் கிழக்கு மாகாணம் அதில் ஒன்றாக இருந்தது.
ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தம் எனும் துரதிஸ்டவசமான ஒரு சம்பவத்தால்தான், கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்கின்ற காரியத்தில், நாம் ஒரு போதும் துணைநின்றுவிடக்கூடாது” என்றார்.
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர், தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் டொக்டர் ஏ. உதுமாலெவ்வை மற்றும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
‘சுதந்திர கிழக்கு’ – மூதூர் கூட்டத்தில் இடம்பெற்ற ஏனைய உரைகளைப் படிக்க:
கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை