தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார் என்றும் அமைச்சர் கூறினார்.
விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின் பின்னர், சம்பந்தப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் உயிரைக் கொல்வதற்காக வந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் மற்றும் சீகிரியா ஓவியத்தைச் சேதப்படுத்திய சிறுமி ஆகியோரை, ஜனாதிபதி மன்னித்தமையினையும் அமைச்சர் இதன்போது நினைவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில், 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.