வயம்ப விளையாட்டு விழா; தெ.கி. பல்கலை மாணவர்கள் புறக்கணிப்பு: வேடமிட்டுக் கலந்து கொண்டனர் ஊழியர்கள்
– றிசாத் ஏ காதர் –
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு, இன்று வியாழக்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான நிலையில், அங்கு சென்றிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்புச் செய்துள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து, குறித்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு சுமார் 35 மாணவர்கள் சென்றிருந்தனர். இந்த நிலையில், அங்கு வைத்து பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறைப் பணிப்பாளரால் விழாவில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அந்த சீருடைகள் மிகவும் தரங்குறைந்தவை என்றும், அவற்றினை அணிந்து கொண்டு விழாவில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறி, குறித்த விழாவினைப் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து குறித்த விளையாட்டு விழாவுக்கு மாணவர்களுடன் சென்றிருந்த ஊழியர்கள், சீருடைகளை அணிந்து கொண்டு, மாணவர்கள் போன்று விழா அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து இம்முறை இலங்கைப் பல்கலைக்கழங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பெண் மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், இம்முறைதான் முதன் முறையாகக் கலந்து கொள்கின்றனர்.
குறித்த விளையாட்டுப் போட்டியிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான சீருடையினைத் தயாரிக்கும் பணிகள் நீண்ட காலத்துக்கு முன்பாகவே ஆரம்பமானது. இதன்போது, தமக்குரிய சீருடையின் வடிவம் மற்றும் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று, பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் பிரிவினருக்கு மாணவர்கள் சிபாரிசுகளை வழங்கியிருந்தனர்.
ஆயினும், சீருடை தயாரிக்கும் வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே, மைதானத்தில் வைத்து, இன்றைய தினம் மாணவர்களிடம் சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, சீருடையின் தரம் மற்றும் வடிவம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், அதனை அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்த மாணவர்கள், இன்றைய விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளாது புறக்கணிப்புச் செய்துள்ளனர்.
மாணவர்களுக்கான மேற்படி சீருடையினைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தினை, விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த போதனாசிரியர் ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு வழங்கியதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் பிரிவுக்கு, தற்போது புதிய பதில் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.