டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி

🕔 June 23, 2015

James Horner - 01டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர் (James Horner),  நேற்று திங்கட்கிழமை காலை – விமான விபத்தில் பலியானார்.

ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ -13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட் உள்ளிட்ட திரைப் படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள  சண்டா பார்பரா அருகே, திங்கள்கிழமை காலை சிறியரக விமானமொன்றில், ஜேம்ஸ் ஹொர்னர் – தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது – இந்த விபத்து நேர்ந்துள்ளது. இறக்கும் போது இவருக்கு 61 வயது.

ஜேம்ஸ் ஹொர்னர் தனது சொந்த விமானத்தை ஓட்டிக் கொண்டு சென்றபோது, இந்த விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்த உத்யோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இரண்டு ஒஸ்கர் விருதுகள், 04 கிராமி விருதுகள், கோல்டன் க்ளோப் என்று,  ஜேம்ஸ் ஹொர்னர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானதாகும்.

இவர் இசை அமைத்த ‘டைட்டானிக்’ திரைப்படம் 11 ஒஸ்கர் விருதுகளைப் பெற்றன. அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கெமரூன், ஒரு விழாவில் பேசும்போது; “இந்த விருதுகள் – படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னரையே சாரும். ஒரு கப்பலை மட்டுமே நான் உருவாக்கினேன். அதற்கு இசை மூலம் உயிர் கொடுத்தவர் ஹொர்‌‌னர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஜேம்ஸ் ஹொர்னர் இசையமைப்பில் உருவான ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மை ஹார்ட் வில் கோ ஒன்’ (My Heart Will Go On) பாடல் – மொழிகள் கடந்து, உலகளவில் பிரபல்யமானது. இந்தப் பாடலை ‘செலின் டியொன்’ (Celine Dion) பாடியிருந்தார்.

1953 ஆம் ஆண்டு பிறந்த ஜேம்ஸ் ஹொர்னர், அவரின் 05 ஆவது வயதில் – இசையைக் கற்றுக் கொள்வதற்காக, லண்டன் ரோயல் இசைக் கல்லூரிக்குச் சென்றார்.

70 களில் கோட்பாட்டு ரீதியாக இசையையும், இசையமைப்பினையும் கற்கத் தொடங்கிய இவர், அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்