அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு
இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர் மைக்கல் ஜே. டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர்,அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று புதன்கிழமை மாலை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பாக பரஸ்பரம் விரிவாக ஆராயப்பட்டது. அமெரிக்கா– இலங்கைக்கு இடையிலான 12 வது வர்த்தக முதலீட்டு கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.
கொழும்பில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக வேலைத்திட்டம் நாளைய தினம் ஆரம்பிக்கப்படுகின்றமை, ஒரு மைல்கல் என அங்கு சிலாகிக்கப்பட்டது.
இலங்கைக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி வருவதாகவும், அத்தனை உதவிகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் – தான் நன்றி பகர்வதாகவும் கூறினார்.
மேலும், 2010 ஆம் ஆண்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுப்பேற்று, அதன் பணிகளை ஆரம்பித்த பின்னர், அமெரிக்க உதவிச்செயலாளர் மைக்கல் ஜே. டெலனி தொடர்ச்சியாக இங்கு விஜயம் செய்து, எம்மை சந்தித்து – எமது செயற்பாடுகளுக்கு ஊக்கம் தந்து வருகின்றார். அவருடனான சந்திப்புக்கள் எனக்குப் பெரும் பலத்தை தருகின்றது. எங்களது அமைச்சு அமெரிக்கா– இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், அமைச்சர் உறுதியளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க உதவிச்செயலாளர் மைக்கல் ஜே. டெலனி; இலங்கையின் அர்த்தபுஷ்டியான, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்கா எப்போதும் உதவும் என்றார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி. தென்னகோன், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி ஜினதாச மற்றும் வர்த்தக திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சோனாலி விஜேரத்ன உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு