மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு
🕔 August 30, 2016
– றிசாத் ஏ காதர் –
மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால், இத் தொழிற் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக, பாதணி உற்பத்திகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சிப் பட்டறையின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக தோல் சார் பாதணி உற்பத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் எல்.பீ.எஸ். கருணாதாச கலந்து கொண்டார்.
மேலும், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் பீ. ஜோதிபால, மாவட்ட சமூக சேவை அதிகாரி எம்.சீ. சம்சுதீன் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ். பாறூக் ஆகியோருடன் கைத்தொழில் வர்த்தக ஊக்குவிப்பு முகாமையாளர் எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு, நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளினால், ஒரு தொகுதி பாதணிகள் உற்பத்தி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.