வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம்

🕔 August 30, 2016

Article - Nifras - 01111
– ஏ.எல். நிப்றாஸ் –

திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ‘முன்னோட்டங்கள்’ (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை வேறு மாதிரியிருக்கும். கிளைமேக்ஸ் கட்டத்தில் எல்லாம் மாறிவிடும். இன்னும் சில நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இவையெல்லாவற்றையும் தீர்மானிப்பது அதன் பின்னால் இருக்கின்ற இயக்குனர்களே.

அவ்வாறில்லாமல் வெறுமனே கச்சான் கொட்டை சாப்பிட்டுக் கொண்டு தொலைக்காட்சிக்கு முன்னால் கால்மேல் கால்போட்டு உட்காந்திருக்கின்றவர்கள் அல்ல. நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டால், ரிமோட் கொன்ட்ரோல் மூலம் எத்தனை முறை அந்த அலைவரிசையை நீங்கள் மாற்றினாலும், ஒருவேளை நீங்கள் பார்க்காவிட்டாலும் அந்த நிகழ்ச்சி உங்கள்வீட்டு தொலைக்காட்சியிலும் போய்க் கொண்டே இருக்கும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பிலும் அதில் பிரதான இடம்வகிக்கும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலும்; பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தம்முடைய நிலைப்பாடுகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதாவது நிகழ்ச்சி முன்னோட்டத்தைப் பார்த்து இது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோமே தவிர, உண்மையில் அது எவ்வாறு அமையப் போகின்றது என்பதை ‘இயக்குனர்கள்’ மட்டுமே அறிவார்கள். ‘வடக்கு, கிழக்கு இணைக்கப்படவே மாட்டாது’ என்று பெருமளவான சனம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இணைப்பதற்கு ‘முஸ்லிம் தலைவர் ஒருவர் பெரிய பேரம் பேசல்களை மேற்கொள்கின்றார்’ என்று ஊர்ஜிதமற்ற கதைகள் பரவுகின்றன. ‘அவரும் இதற்கு உடன்பட மாட்டார். கடைசில் கெடுத்துவிடுவார்’ என்று ஒரு தரப்பு கூறுகின்றது. ‘அவர் உடன்பட்டாலும் மற்றையவர்கள் இணைக்கப் விடமாட்டார்கள்’ என்று பலமான ஒரு கருத்தும் உள்ளது. எல்லாத் தடைகளையும் முறியடித்து திட்டமிட்ட இணைப்பை நடாத்திக் காட்டுவதில் தமிழ் தரப்பினர் அதீத முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இணைந்த தீர்வு

வடக்கு, கிழக்கை இணைத்து அதற்குள் தீர்வைக் காண்பதற்கு தமிழர்கள் முற்படுகின்றார்கள் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. எனவே வடக்கும் கிழக்கும் ஏன் இணைக்கப்படப் போகின்றது? அது எவ்வாறு செய்யப்படலாம்? இதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் சாதக, பாதகங்கள் என்ன? என்ற விடயத்தை இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சமகாலத்தில் முஸ்லிம் தலைமைகளினதும் தமிழ்; அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது என்பதையும் இதற்குப் பின்னால் நாம் அறியாத ஏதாவது உள்ளதா? என்பதை உய்த்தறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் நாம் இருக்கின்றோம்.

முன்னர் இவ்விரு மாகாணங்களும் இணைந்திருக்கும் போது கிடைக்கப் பெற்ற சில மாகாண சபை உறுப்பினர் பதவிகளை தவிர்த்துப் பார்த்தால் வேறெந்த நன்மையும் பெரியளவில் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு ஆட்சிக் கட்டமைப்பே அப்போதிருந்தது. வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போதுதான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள், கிழக்கில் பள்ளிகளுக்குள்ளும் வயல்நிலங்களிலும் பயணவழியிலும் இனந்தெரியாத நபர்கள் என்ற கௌரவப் பெயர்தாங்கிய ஆயுததாரிகளும் முஸ்லிம்களை பலிகொண்டனர். இப்போது நிலைமைக் மாறிவிட்டன. மீண்டும் இம் மாகாணங்கள் இணைக்கப்பட்டால், அங்கு ஆயுதக்குழுக்கள் இருக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக சிலவேளைகளில் மாநில பொலிஸார் இருப்பார்கள். ஒருவித அமைதி இருக்கும். ஆனால் உத்தேச வடகிழக்கு மாகாணம் முன்னைய வடகிழக்கு மாகாண ஆட்சிமுறை கட்டமைப்பின் பல சாயல்களை கொண்டிருக்கலாம்.

தமிழர்களோடு இணைந்திருக்கவே வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். ஆயுதங்கள் முஸ்லிம்களை நோக்கி திருப்பப்படவிடாது இருந்திருந்தால், முஸ்லிம் ஊர்களில் இருந்த சண்டியர்கள் சிலர் பழிதீர்க்காது விட்டிருந்தால் அது தானாகவே நடந்திருக்கும். ஆனால், இரண்டு மாகாணங்களை இணைப்பதன் மூலம் இவ்விரு இனங்களையும் இணைக்கலாம் என்ற கருத்திட்டத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு திடமான நம்பிக்கையில்லை. த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மேலும் சில அரசியல்வாதிகளையும் பார்த்தால் முஸ்லிம்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்படுகின்றது. ஆனால் பெயர்குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது அந்த நம்பிக்கை இல்லாது போய்விடுகின்றது. இவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து, அதன்கீழ் நாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று முஸ்லிம்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.

நன்மையும் தீமையும்

இணைந்த வடகிழக்கு உருவானால் தமிழர்களுடன் முஸ்லிம்கள் இரண்டறக் கலந்து வாழலாம். ஆரம்பத்தில் முஸ்லிம்களை தமிழர்கள் மிகவும் கண்ணியத்தோடும் நன்றிக் கடனோடும் பார்ப்பார்கள். இந்த மாகாணத்திற்காக அதிகளவான வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் என்பதால் அதன் பயன்கள் முஸ்லிம்களுக்கும் வரும். சிங்கள இனவாதிகளின் நடவடிக்கை வடகிழக்கிற்குள் கட்டுப்படுத்தப்படுவார்கள். இப்படி நிறைய அனுகூலங்களை இணைந்த வடகிழக்கில் உள்ள முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதிகமான பாதகங்களையும் சந்திக்க நேரலாம். இதைச் சொல்வதற்காக தமிழ் நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

குறிப்பாக, வடகிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட ஒரு தனி இராஜ்ஜியம் போல தமிழர்களால் ஆட்சி செய்யப்படலாம். கிழக்கு மாகாண தமிழர்களை விட வடபுல தமிழ் சகோதரர்களின் கை ஓங்கியிருக்கலாம். சிலகாலம் போனதும் இரு இனங்களுக்குள்ளும் இருக்கின்ற அரசியல்வாதிகள் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தூபமிடலாம். கிழக்கு ஒரு தனிமாகாணமாக இருக்கின்ற போது முஸ்லிம்கள் பெற்றுவருகின்ற பல வரப்பிரசாதங்களை இணைந்த வடகிழக்கில் இழந்துபோவார்கள். முஸ்லிம்களுக்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். முஸ்லிம் ஒருவரை எக்காலத்திற்கும் முதலமைச்சராக வைத்திருக்க தமிழ் தேசியம் விரும்பாது. அப்படியே ஒருவர் இருந்தாலும் அவர் டம்மி முதலமைச்சராகவே இருப்பார்.

தனியொரு மாகாணமாக கிழக்கு இருக்கின்ற போது கிடைக்கின்ற தொழில்வாய்ப்புக்கள், நிதி ஒதுக்கீடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் இணைந்த வடகிழக்கில் 40 வீதத்தால் குறைவடைந்து போகும். மிக முக்கியமாக இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் இனவீதாரசாரம் குறையும். அதேபோன்று வடக்கு கிழக்கை இணைக்கக் கூடாது என நினைக்கும் சிங்கள மக்கள், இணைந்த வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தலைப்படுவார்கள். இப்படியே வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான காரணங்களின் அடிப்படையிலேயே மாகாணங்களின் இணைப்பை முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள்.

தமிழர்களின் நிலைப்பாடு

தமிழர்களில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டுமென நினைக்கின்றார்கள். ‘இணைந்த வடகிழக்கில் இனப்பிரச்சினை தீர்வு’ என்பது வடக்கில் வாழும் தமிழ் மக்களின் ஒரு யுகாந்திர கனவாகும். எனவே அவர்கள் நூறுவீதம் உறுதியுடன் இருக்கின்றார்கள். தமிழ் சமூகத்திற்குள் இருக்கின்ற குலம், கோத்திர வேறுபாடுகள் மற்றும் பிராந்திய வாதங்களின் அடிப்படையில் வடபுலத்தவர்களின் கையோங்கிய அரசியல் சூழல் காணப்படுமோ என்ற அச்சம் கிழக்கு தமிழர்களில் ஒரு பகுதியினருக்கு உள்ளது. இது சுமார் 10 வீதமான தமிழர்கள் மட்டுமே. ஆனால், ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு மாகாணத்தில் வாழ்வதை விட வடக்கு தமிழ் சகோதரர்களுடன் இணைந்து வாழ்வதில் இந்த 10 வீதமானவர்களும் மற்றைய 89 வீதமானவர்களுடன் உடன்படுகின்றனர் என்பது முக்கியமானது.

யுத்தகாலத்தில் புலிகள் முஸ்லிம்களுக்கு பெரும் அநியாயங்களை செய்தார்கள் என்று சொல்லும் நாம், தமிழர்கள் விடயத்தில் நாம் செய்த அநியாயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலிகள் முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்காக ஊர்ச் சண்டியன்களும் தற்காப்பு ஆயுதங்களை வைத்திருந்தோரும் ஊர்காவல் படையினரும் செய்த காரியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி யுத்தம் முடிவடைந்து, கிழக்கில் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த பிறகாவது பரஸ்பர உறவுகளை வளர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல பிரதேசங்களில் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை பார்த்து தமிழர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தமிழ் நண்பர்கள் சொல்கின்றார்கள். இதை முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செய்யவில்லை என்றாலும் தமிழர்கள் இவ்வாறு உணர்கின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இந்தப் பின்னணியிலேயே வடக்குடன் இணைவதற்கு கிழக்கு மாகாண தமிழர்கள் விருப்பம் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதற்காக முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும் என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. ஆயினும் விட்டுக் கொடுப்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது. எதை விட்டுக் கொடுக்கலாம், எதை விட்டுக் கொடுக்க முடியாது என்று வரையறை உள்ளது. யாருடைய அஜந்தாவுக்காகவும் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் – தமது சுயநிர்ணயத்தை, சுயத்தை, அபிலாஷையை, ஆட்புல எல்லையை எல்லாம் முற்றுமுழுதாக விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு கனவுக்காக இன்னுமொரு சமூகத்தின் கனவை பலிகொடுக்க முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதில் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பது என்பது மிக இலகுவாக நடந்து விடக் கூடிய காரியமல்ல. ஏனென்றால் முஸ்லிம் தரப்பு என்ற காரணிக்கு அப்பால் இதில் தாக்கம் செலுத்தும் வேறு எத்தனையோ காரணிகள் உள்ளன. சிங்கள பெருந்தேசியவாதம், சர்வதேச நாடுகளில் நலனும் அரசியலும், இனவாதம், தமிழ் மாற்றுக் கருத்தாளர்களின் வகிபாகம், அரசாங்கத்தின் வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்தமான திட்டங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இது எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் திருப்திப்படுத்தினால் மாத்திரமே இரு மாகாணங்களை இணைக்க முடியும்.

குளிர்வித்தல்

வடக்கு- கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களின் ஆதரவு அவசியமாக இருக்கின்றமையால் முஸ்லிம்களை குளிர்விப்பதற்கான போக்குகளை புலம்பெயர் தமிழர்களும் தமிழ் தேசியமும் மேற்கொண்டு வருவதுபோல் தெரிகின்றது. சமகாலத்தில் மு.கா. தலைவர் வடக்கையும், கிழக்கையும் இணைத்துக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றார் என்று பகிரங்கமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மு.கா. கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அண்மைக்காலமாக முன்வைக்கின்ற கருத்துக்களும் இதற்கு ஏற்றாற்போல் இருக்கின்றன. ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்றும் ‘தமிழர்களுடன் உறவை பலப்படுத்த வேண்டும்’ புதிசாக ஞானம் பிறந்தவர்கள் போல இவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்கள், மக்களின் மனங்களை – தமது நிலைப்பாட்டை நோக்கி திருப்பும் முயற்சியா என்ற வலுவான சந்தேகம் உருவாகியிருக்கின்றது. இதுகூடப் பரவாயில்லை. கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் ‘வடக்கையும் கிழக்கையும் பிரித்த இனவாதி’ என்று குறிப்பிட்டதாக அண்மையில் இணையங்களில் வெளியான கருத்து அதைவிட மிகவும் பாரதூரமானதாகும்.

தெளிவுடன் இருத்தல்

இவ்விடத்தில் இன்னுமொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, எந்த வகையிலும் தமிழர்கள் நினைப்பதை சிங்கள அரசாங்கம் வழங்காது. எப்படியும் புலம்பெயர் தமிழர்களும் தமிழ் கூட்டமைப்பும் நினைப்பது கிடைக்காமாட்டாது. எனவே இந்த திட்டம் எவ்வாறு குலையப் போகின்றது. எனவே நாம் (முஸ்லிம்கள்) இதைக் தடுத்ததாக இருக்கக் கூடாது. இப்போதைக்கு நாம் ஆதரவு போல் காட்டிக் கொள்வோம். பின்னர் அதுவாக குலைந்து விடும் என்ற சாணக்கியத்தில் மு.கா. தலைவர் செயற்படுவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

அப்படியென்றால் இது மிகவும் ஆபத்தானதாகும்;. அதாவது தமிழர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எண்ணி ஆதரவளிப்பது சிங்களவர்களை பகைக்கும் செயலாகும். அதுபோல, ஒருவேளை எல்லாம் தானாக குலைந்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் அப் பழியை முஸ்லிம்களின் தலையிலேயே போடுவார்கள். முஸ்லிம்கள் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டதாக தமிழ் மக்களும் சொல்வார்கள். சாணக்கியம் சந்திசிரிக்கும்.

எனவே, நமக்கு என்ன தேவை? தீர்வுத்திட்டத்திலும் மாகாண இணைப்பு விடயங்களிலும் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதை முஸ்லிம் காங்கிரஸூம் ஏனைய கட்சிகளும் தெளிவுற வெளிப்படுத்த வேண்டும். அது தமிழர்களின் நலன்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது. தமிழர்களின் கோரிக்கைகளை மலினப்படுத்தக் கூடாது. யாரையும் நம்ப வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையோ, உள்ளொன்று வைத்து வெளியில் வேறொன்றை பேச வேண்டிய அவசியமோ முஸ்லிம்களுக்கு கிடையாது என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழர்களும் தீர்வுத் திட்டத்தை கேட்டுக் கொண்டிருப்பவர்களே. எனவே அவர்களுடன் கலந்து பேசலாமே தவிர, தமக்கே தீர்வை பெற்றுக் கொள்ளாத தமிழ் கூட்டமைப்பிடம் முஸ்லிம்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தேவையில்லை. அதை அரசாங்கத்திடமே கேட்டுப் பெறவேண்டும்.

அதுபோலவே, முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரேயொரு கட்சியை மட்டும் வழிக்கு கொண்டுவந்தால் முஸ்லிம்கள் எல்லோரும் வழிக்கு வந்து விடுவார்கள் என்று தமிழ் அரசியல் வாதிகள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். அக்கட்சியுடன் பேசுவது இன்றியமையாதது என்பது உண்மையே. ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் ஏனைய கட்சிகளும் செல்வாக்குச் செலுத்தும். இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகளை கணக்கெடுக்காது கிழக்குக்கு வெளியில் பிறந்த ஒரு தலைவருடன் இணக்கப்பாட்டுக்கு வருவதால் எல்லாம் தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்று யாரும் தப்புக்கணக்கு போடக் கூடாது. நிரந்தரமான, நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் தமிழ் தரப்பினர் உடையாடல்களை வளர்க்க வேண்டும். அங்கு என்ன பேசப்படுகின்றது என்பதை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஒளிவுமறைவாக வைப்பதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை என்பது யாரும் அறியாத விசயமும் இல்லை, கள்ள டீலிங்கும் இல்லை.

இக் கதையின் ‘ட்ரெய்லர்கள்’ யாரையும் பேய்க்காட்டுவதாக இருக்கக் கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்