விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

🕔 August 28, 2016

Slug - 2016 - 02
– றிசாத் ஏ காதர் –

ல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீபம், நேற்று சனிக்கிழமை மாலை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை வந்தடைந்தது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த விளையாட்டுப் போட்டி வயம்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டே குறித்த தீபம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, கடந்த காலங்களில் நடைபெற்று வருகின்றபோதும், இம்முறையே முதல் தடவையாக பல்கலைக்கழகங்களுக்கிடையில் தீபங்கள் கொண்டு செல்லும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட தீபம், வவுனியா வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அதே தினம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட ரஜரட்ட மாணவர்கள், தீபத்தினை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு வந்து, அங்குள்ள மாணவர்களிடம் நேற்று சனிக்கிழமை காலை கையளித்தனர். இதனையடுத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த தீபத்தினை எடுத்து வந்து, நேற்று சனிக்கிழமை மாலை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளித்தனர்.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிக்கான தீபத்தினைப் பெற்றுக்கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அதனை அந்தப் பல்கலைக்கழகத்தின் நிருவாகப் பதிவாளர் எம்.ஐ. நௌபரிடம் ஒப்படைத்தனர். அதனை, அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இதன் பின்னர், குறித்த தீபத்தினை – அந்தப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பதில் பணிப்பாளர் ஐ.எம். கடாபியிடம் உபவேந்தர் வழங்கினார்.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், இம்முறை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து 200 க்கும் அதிகமான ஆண் – பெண் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பெண் விளையாட்டு வீரர்கள் முதல் தடவையாக இம்முறையே கலந்துகொள்கின்றனர் என்று, அப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பதில் பணிப்பாளர் ஐ.எம். கடாபி தெரிவித்தார்.Slug - 2016 - 01 Slug - 2016 - 03

Comments