உயர்பீடக் கூட்டத்தின் கூச்சல், குழப்பம்; பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் பசீர் விபரிக்கின்றார்

🕔 August 25, 2016

Basheer - 03111“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடத்தையும் அதன் வருமானத்தையும் எந்தவொரு கம்பெனியின் பணிப்பாளர்களின் உடைமையாகவும் மாறுவதை அனுமதிக்கப்போவதில்லை. மக்களின் சொத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் இருந்து நான் ஒயப்போவதும் இல்லை” என்று மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற, மு.காவின் உயர்பீட கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு குறித்து ஊடகமொன்று வினவிய கேள்விக்கு பதிலளித்தபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“தாருஸ்ஸலாத்தின் மீது முன்வைக்கப்படுகின்ற அல்லது என்னால் எழுப்பப்படுகின்ற அடிப்படைக் கேள்விகளுக்கு நேரடியாகவும் தெளிவாகவும் பதில் சொல்வதில்  இருந்து மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நழுவல் போக்கில் விளக்கம் அளித்தார்.

அவரது விளக்கம் என்பது புறக்காரணிகளை மட்டும் மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. ஆகையால் சரியான பதிலாக அவை முழுமை பெறவில்லை.

இந்நிலையில் அகக் காரணிகள் பற்றி  -நான் முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் எனது தன்னிலை விளக்கத்தை முன்வைக்க முற்பட்டேன்.

எனது தன்னிலை விளக்கத்தை முன்வைக்கின்ற அடிப்படை ஜனநாயக உரிமை மீறப்படும் வகையில், சில கூலிக்கு அமர்த்தப்பட்ட ஏவலாளிகளின் தேவையற்ற கூச்சல்கள் சலசலப்பை ஏற்படுத்தி, கட்சியின் தலைமையகத்தின் மீதான அகக்காரனிகளை முன்வைக்க முடியாத ஒரு முடக்கத்தை ஏற்படுத்தினர்.

உண்மையில் என்னால் முன்வைக்கப்பட இருந்த அகக்காரணிகள் வெளிப்படுத்துகின்ற உண்மைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் நபரின் குத்துவெட்டுக்கள், துரோக செயல்கள் அம்பலமாகிவிடும் என்ற பயமுடையோரினால், முன்னரே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சில அடிவருடிகளினால், தேவையற்ற கூச்சல்களும், குழப்பங்களும் ஏற்பட்டன.

இதற்கிடையில், தவிசாளரை பேச அனுமதிக்குமாறு தலைவர் ஓரிரு தடவைகள் சொல்லிவிட்டும்,அதே நேரம் சில உயர்பீட உறுப்பினர்கள்  தலைவருக்கு முன்னால் சென்று  கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தவிசாளரை பேச அனுமதியுங்கள் என கூறியதையும் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் கூட்டத்தை  தலைவர் முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்த தேவைப்பாடு அவர்களுக்கு ஏன் ஏற்பட்டதென்றால், உயர்பீட கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தவர்களில் நடுநிலையானவர்கள் உண்மையை விளங்கி, அவர்களும் எனது நியாயமான கேள்விகளின் பின்னால் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் பின்னணியன்றி வேறில்லை.

நமது கட்சியின் தலைமைக் காரியாலயக் கட்டிடம் மூன்று முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. அவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (கட்சி),நம்பிக்கை நிதியம்  (LOTUS), கம்பனி  (Unity Builders Pvt. Ltd) ஆகியவற்றோடு தொடர்புபட்டதாகும்.

தாருஸ்ஸலாம் கட்டிடத்தின் மீதான கேள்விகள் தலைவருக்கு எதிரான கேள்வி போன்று ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இரையான சிலரும், யாருடைய குட்டு அம்பலத்துக்கு வந்துவிடும் என்று பயப்படுகின்ற நபரின் சுத்துமத்துக்குள் அகப்பட்டுக்கொண்டு, கைக்கூலிகளாக மாறியுள்ள சிலரின் பின்னால், இவர்களும் இணைந்து காணப்படுகின்ற ஒரு துர்பாக்கிய நிலை இதற்குள் மறைந்து கிடக்கிறது.

எது எவ்வாறு இருந்தாலும், நமது கட்சியின் தலைமையகத்துக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை அகற்றுவதற்கு, எனது இறுதி மூச்சு வரை போராடுவது என்ற என் தீர்மானத்தில் இருந்து, இந்த கைக்கூலிகளின் கூச்சல்களும் கும்மாளங்களும் ஒரு போதும் என்னை பின்னடைய செய்யப் போவதில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்