சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்தே, வருடாந்த மாநாட்டினைப் புறக்கணிக்கும் தீர்மானத்தினை தாம் எடுத்ததாக, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அந்தக் காலப்பகுதியில் அவர் இத்தாலிக்கான பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுவார்கள் என்று, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கடந்தவாரம் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.