மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார். இந்தப் பயணத்துக்காக 50 மில்லியன் ரூபாய் செலவாகியிருந்தது.
இரண்டாவது தடவையாக 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்குப் பயணமானார். இதன்போது அவருடன் 97 பேர் கொண்ட குழுவும் சென்றிருந்தது. அங்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இலங்கை வங்கிக் கிளை மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கிறை ஆகியவற்றினை திறந்து வைத்திருந்தார்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ அங்கு திறந்து வைத்த ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கம்பனியின் கிளை தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை வங்கிக் கிளை இயங்குவதிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீசெல்ஸ் நாட்டுக்கான மஹிந்தவின் இரண்டாவது பயணத்தின்போது, அப்போதைய அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரின மனைவி ஆகியோரும் சென்றிருந்தனர்.
இரண்டாவது பயணத்தின் போது, அங்கு உபயோகிப்பதற்காக 68 வாகனங்களும், 68 கையடக்கத் தொலைபேசிகளும் வாடகைக்குப் பெறப்பட்டிருந்தன. ஆயினும், கையடக்கத் தொலைபேசிகள் மீளளிக்கப்படாமல் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர்கள் தீவுகளுக்கிடையில் பயணம் செய்வதற்காக, 03 அதிசொகுசுப் படகுகளும் வாடகைக்குப் பெறப்பட்டிருந்தன.
சீசெல்ஸ் நாட்டுக்கான மஹிந்தவின் இரண்டாவது பயணத்துக்காக, கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.