மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்
– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தினை உயர்பீட உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அனுப்பி வைத்துள்ளார்.
அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தன்னை, ‘உயர்பீட செயலாளர்’ எனக் குறிப்பிடாமல், ‘செயலாளர்’ என்று பதிவு செய்துள்ளார்.
இது குறித்து, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தமது கடுமையான அதிருப்திகளை வெளியிட்டு வருவதோடு, எதிர்வரும் உயர்பீடக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கேள்ளியெழுப்பவுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.
ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் ‘வெளிச்சம்’ எனும் அரசியல் நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், மன்சூர் ஏ. காதர் பற்றி கூறும்போது, ‘செயலாளர்’ என்றே குறிப்பிட்டிருந்தார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
மு.காங்கிரசின் செயலாளராக எம்.ரி. ஹசனலி பதவி வகிக்கும்போது, கட்சியின் கடிதத் தலைப்பில் வேறொரு நபர், தன்னை ‘செயலாளர்’ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகுமென்று, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினராகப் பதவி வகிக்கும் சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.
உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மு.காங்கிரசின் ‘செயலாளர்’ பதவியை மன்சூர் ஏ. காதர் வகிக்கின்றார் என்றால், கட்சிக்குள் ஹசனலியின் நிலை என்ன என்பது குறித்து, கட்சியின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உயர்பீடக் கூட்டத்தில் – இது குறித்து, தெளிவினை பெறவேண்டியுள்ளதாகவும், மேற்படி சட்டத்தரணியான உயர்பீட உறுப்பினர் மேலும் கூறினார்.
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள மு.கா. வின் உயர்பீடக் கூட்டத்தில், கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் தொடர்பில் பேசப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.