கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர் கூறினார்.
எனினும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பொலிஸ் பேச்சாளரான பிரசாந்த ஜயகொடியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது பிரசாந்த ஜயகொடி மேலும் கூறுகையில்;
“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன். அப்போது நாட்டில் இருந்த வெள்ளை வான் கலாசாரம் தொடர்பில் நான் அறிந்திருந்ததால் எனது மகள், மனைவியின் நிலைமையை எண்ணி வெளிநாட்டில் தஞ்சமடையும் முடிவினை எடுத்தேன்” என்றார்.
பொலிஸ் பேச்சளராக இருந்தபோது, அசாதாரணமான அறிக்கை வெளியிட வற்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டதாகவும், இரத்தினபுரியில் கடமையாற்றும் போதும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்ததாகவும், அவர் கூறினார்.