நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மாநாடு நடைபெறும் போது, தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று, மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் – அமைச்சர் செனவிரத்ன கூறினார்.
சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு, செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப – தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மிரிஹானையில் உள்ள, மஹிந்தவின் வீட்டுக்குச் சென்று, மாநாட்டுக்கான அழைப்பிதழைக் கையளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செனவிரத்ன கூறுகையில்; ” அவர் என்னுடன் மிகவும் சினேகமாக நடந்துகொண்டார். நாட்டில் இருந்தால், நிச்சயம் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்தார்” என்றார்.
இந்த மாநாட்டின் போது, கட்சியின் போஷகர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இரு பக்கங்களிலும் ஆசனங்களை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.