அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு
– ஏ.எச்.எம். பூமுதீன் –
இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று, பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
அலரி மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற, சிறிய மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடான சந்திப்பின் போதே, பிரதமர் மேற்படி உறுதிமொழிகளை வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிசாத் – இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
‘சோபித்த தேரரை நேற்று நாங்கள் சந்தித்தோம். அதன்போது, 20 ஆவது தேர்தல் திருத்த வர்த்தமானி அறிவித்தலை, உடன் வாபஸ் வாங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினோம்.
அத்தோடு, ஜனாதிபதியாக மைத்திரியை உருவாக்குவதற்கு பாடுபட்ட கட்சிகளை புறம் தள்ளும் விதமாகவே, இந்த வர்த்தமானி அறிவித்தல் அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினோம். மேலும், இந்த யோசனையையும் வர்ததமானி அறிவித்தலையும் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்தோம்.
அதற்கு அமைய, சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை பூரணமாக ஏற்றுக்கொண்டு, எமது நிலைப்பாட்டுக்கு என்றும் ஒத்தாசையாக இருப்பதாகவும், இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். இது எமக்கு கிடைத்த முதல் வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம்.
அந்த அடிப்படையில்தான்இ இன்று காலை பிரதமரை சந்தித்து, 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாங்கள் உரையாடினோம்.
இதன்போது, எமது நிலைப்பாட்டையும் – எமது ஆதங்கங்களையும் உள்வாங்கிக் கொண்ட பிரதமர், எமது கோரிக்கைகளை முற்றாக ஏற்றுக் கொண்டார்.
அனைத்துக் கட்சி ஒன்றிணைந்த அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு யோசனையையும், நானோ எனது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியோ ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும், அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்’ என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.
பிரதமருடனான இன்றைய சந்திப்பில் மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், த.தே.கூட்டமைப்பு தலைவர் இரா. சம்மந்தன் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.