தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி

🕔 August 15, 2016

Hakeem+ Hasanali - 098– அஹமட் – 

மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவரை தொலைபேசியில் அழைத்து, ஹசனலி சூடாகவும், கடுமையாகவும் பேசியதாகத் தெரியவருகிறது.

மு.கா. தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கட்சிக்குள் மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தலைவர் ஹக்கீமுடைய விருப்பத்துடனும், உயர்பீடத்தின் அனுமதியுடனும் உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவுக்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும், ஹக்கீமுடைய தூதுவராகச் சென்று – ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இவை இவ்வாறிருக்க, ஹசனலியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தான் யாரையும் நியமிக்கவுமில்லை, அனுப்பவுமில்லை என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் ஊடகமொன்றுத் தெரிவித்திருந்தார்.

ஹக்கீமுடைய இந்தக் கூற்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், ஹக்கீம் கூறியதாக தன்னிடம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒருவரை மு.கா. செயலாளர் ஹசனலி தொலைபேசியில் அழைத்து, ஹக்கீமுடைய கூற்று தொடர்பில் கேட்டுள்ளார். மு.கா. தலைவர் உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லவில்லை என்கிறபோது, எதற்காக என்னிடம் வந்து பேசி, எனது காலத்தை வீணடித்தீர்கள் என்று சூடாகப் பேசியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த குறித்த நபர், மு.கா. தலைவர் ஹக்கீம் அவ்வாறு சொல்ல முடியாது, உயர்பீடக் கூட்டத்தில்தான் பேச்சுக்களை நடத்துவதற்கான குழு தீர்மானிக்கப்பட்டது. ஹக்கீமுடைய விருப்பத்துடனேயே அது நடந்தது. பிறகு ஏன் இப்படிச் சொல்லியுள்ளார் என்று தெரியவில்லை. அடுத்த உயர்பீடக் கூட்டத்தில் இது தொடர்பாக நான் கேட்பேன் என்று கூறியுள்ளார்.

மு.கா. தலைவர் நிறையவே தடுமாறுகிறார் என்று, கட்சிக்குள் இது தொடர்பில் பேசிக்கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்