கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

🕔 August 13, 2016

Thief - 098கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் உள்ள குடும்பமொன்று வாழ்வாதாரமாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் வீட்டுக்கு அருகிலுள்ள காவலரணில் கடமையில் இருந்த ராணுவ சிப்பாய் ஒருவர், 03 மாதங்களுக்கு முன்னர் அந்த வீட்டுக்குள் இரவு வேளை புகுந்து, கோழிகளைத் திருடினார்.

கோழி திருடியவரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது, அவர் அருகிலிருந்த ராணுவக் காவலரணுக்குள் புகுந்துகொண்டார்.

இதனையடுத்தே, கோழியைத் திருடியவர் படைத் தரப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

சம்பவத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதுகுறித்து தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனை அடிப்படையாக வைத், ராணுவ சிப்பாயை பொலிஸார்  கைது செய்தனர்.

பின்னர், அவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தவணையிடப்பட்டிருந்தது.

இதன்போது,  குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முறைப்பாட்டாளர் விருப்பம்தெரிவித்ததையடுத்து, குறித்த சிப்பாய் மூவாயிரம் ரூபாவினை இழப்பீடாகச் செலுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்