ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

🕔 August 12, 2016

Article - MTM - 022
– முகம்மது தம்பி மரைக்கார் –

‘கபாலி’ திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை நெருங்குகிறான். திடீரென காட்சி இருட்டாகிறது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. யாரோ யாரையோ சுட்டிருக்க வேண்டும். டைகர் – கபாலியைச் சுட்டானா. அல்லது, கபாலி என்கிற ரஜினி தன்னைத் தற்காத்துக் கொள்ள டைகரைச் சுட்டாரா. அல்லது இந்த இரண்டுக்கும் அப்பால், பொலீசாரை ஏமாற்றுவதற்காக கபாலியும் டைகரும் சேர்ந்து வானத்தை நோக்கிச் சுட்டார்களா என்று, ஒரு ‘இழவு’ம் புரியவில்லை. அதற்குள் படம் முடிந்து விடுகிறது. பார்வையாளர்கள் தத்தமக்கு ஏற்றால்போல், கபாலி படத்துக்கான முடிவினை – கற்பனை செய்து கொள்ளத் தொடங்கினார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் – தவிசாளர் ஆகியோருக்கு இடையிலான மோதல்களும், மு.கா. தலைவர் மீது தவிசாளர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளும், அது குறித்து தலைவர் ஹக்கீம் வேண்டுமென்றே கடைப்பிடிக்கும் மௌனமும் – கபாலி திரைப்படத்தின் முடிவினைப் போலவே, கட்சி ஆதரவாளர்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, ‘மு.காங்கிரஸின் தலைமையகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன’ என்று, கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கூறிவருகின்றார். மு.காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில் 12 கேள்விகளை உள்ளடக்கிய கடிதமொன்றினையும், தலைவர் ஹக்கீமுக்கு தவிசாளர் பசீர் அனுப்பி வைத்தார். ஆனால், இதுவரை – அந்தக் கடிதத்துக்குரிய பதிலை மு.கா.  தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்கவில்லை என்பதெல்லாம் நாம் அறிந்த கதைகளாகும். இந்த நிலைவரமானது – அந்தக் கட்சியின் சாதாரண ஆதரவாளர்களை கடுமையான குழப்பத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது. தலைவர் மீது தவிசாளர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா, பொய்யா. தலைவர் குற்றவாளியா, அப்பாவியா – என்கிற முடிவுகளுக்கு வர முடியாமல், கட்சியின் சாதாரண நடுநிலை ஆதரவாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறனதொரு குழப்ப நிலை உருவாகுவதற்கு, கட்சியின் தலைவரும் தவிசாளருமே காரணமாகவும் உள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சியானது, அதன் அங்கத்தவர்களுக்குச் சொந்தமானதாகும். அந்தக் கட்சியின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்து கட்சியின் அங்கத்தவர்கள் கேள்வி கேட்பதற்கும், தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முழு உரித்துடையவர்களாவர்.

இந்த நிலையில், மு.காங்கிரசின் சொத்துக்கள் யாருடைய பெயரில் உள்ளன எனும் கேள்விகள் பாரியளவிலும், பரவலாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பலகோடி ரூபாய் பெறுமதியுள்ள முஸ்லிம் காங்கிரசின் தாருஸ்ஸலாம் எனும் பெயருடைய தலைமையகக் கட்டிடத்தின் உரித்து, கட்சித் தலைவருக்கும் அவருக்கு நெருக்கமான சிலருக்கும் எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களில் பிரதானமானவர் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்.

முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்களினுடைய உரித்து தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இதுவரை பதிலளிக்காமையானது – பாரிய பொறுப்பு மீறலாகும். தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ள கேள்விகள் குறித்து, தான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொள்ளும் பதிலாகும். மு.கா.வின் இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவர், அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, ‘பதிலளிக்க மாட்டேன்’ என்று கட்சியின் தலைவர் சொல்கின்றமை, சிறுபிள்ளைத்தனமான எதிர்வினையாகும்.

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றினை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் தன்னிடமுள்ளதாகவும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். 08 மாதங்கள், தான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக அந்த அறிக்கையில் பசீர் கூறுகின்றார். மேலும், குறித்த ஆவணங்களை ஆராய்ந்தபோது – அவற்றில் காணக்கிடைத்த உண்மைகள், இத்தனை காலமும் தவிசாளராக இருக்கும் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என்றும், பசீர் சேகுதாவூத் ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ளார். ஆனால், அந்த ஆச்சரியம் என்ன என்பதை, அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இருந்தபோதும், முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு – தான் எழுதிய கடிதத்துக்குரிய பதில்களை அவர் வழங்காமல், வெறுமனே உளறிக் கொண்டிருந்தால், ‘என்னிடமுள்ள ஆவணங்களை வெளியிடுவேன்’ என்கிற எச்சரிக்கையினையும், தனது அறிக்கையில் தவிசாளர் பசீர் பதிவு செய்துள்ளார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கின்றபோது, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடம் மற்றும் ஏனைய சொத்துக்களின் உரித்து தொடர்பில் ‘ஏதோ’ விவகாரம் நடந்திருக்கிறது எனும் ஐயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பது, தனக்குத் தெரியும் என்கிறார் மு.கா. தவிசாளர். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

அப்படியொன்றால், தனது வசமுள்ள ஆதாரங்களை ஏன் ஒரேயடியாக தவிசாளர் போட்டுடைக்கக் கூடாது என்கிற கேள்வி, இங்கு எழக்கூடும். ஆனால், பசீர் அப்படிச் செய்ய மாட்டார். மு.கா. தலைவரை உளவியல் ரீதியாக சிறிது சிறிதாகவும், தொடர்ந்தும் நெருக்கடி நிலையொன்றுக்குள் வைத்திருக்கும் ஒரு தந்திரோபாய செயற்பாட்டினை மேற்கொள்ளவே பசீர் முயற்சிக்கின்றார் என்பதை அவதானிக்க முடிகிறது. சீரான கால இடைவெளிகளில் அவர் வெளியிடும் கடிதங்களையும் அறிக்கைகளையும், அவ்வப்போது அம்பலப்படுத்தும் ஆவணைங்களையும் படிக்கின்றபோது, பசீருடைய எண்ணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பகைவர்களைத் தாக்கக்கூடிய தன்னிடமுள்ள ஆயுதங்களை, களத்தில் ஒரேயடியாகப் பயன்படுத்தி முடிப்பவன் – சிறந்த போர் வீரனாக இருக்க முடியாது என்பதை, ஆயுத இயக்கமொன்றில் நீண்டகாலம் இணைந்திருந்த பசீர் சேகுதாவூத் மிக நன்றாக அறிந்துமிருப்பார்.

இவ்வாறானதொரு நிலையில், ஹக்கீமுக்கு எதிராகப் பயன்படுத்தும் பொருட்டு, வேறு என்ன வகையான ‘ஆயுதங்களை’யெல்லாம் பசீர் தன்வசம் வைத்திருக்கின்றார் என்கிற தகவல்களைத் தேடித் திரட்டுவதில், மு.கா. தலைவருக்கு நெருக்கமானவர்கள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். அவற்றினைத் தெரிந்து கொள்வதன் மூலம், பசீரின் திட்டங்களை முறியறிக்க முடியுமென அவர்கள் நினைக்கலாம். அல்லது தற்காப்பு யுத்தமொன்றுக்காகவேனும், மு.கா. தலைவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளலாமென நம்பலாம். இந்த நிலையில், தவிசாளர் பசீரிடம் மு.கா. தலைவரைப் போட்டுத் தாக்கும் வகையிலான தகவல்களும், ஆவணங்களும் எக்கச்சக்கமாய் இருப்பதாக அரசியல் அரங்கில் பேச்சுக்கள் உள்ளன.

யுத்த தந்திரம் தெரிந்தவர்கள், சண்டையில் இறுதியாக உபயோகப்படுத்தும் பொருட்டு, தம்மிடமுள்ள ஆயுதங்களில் வலிமை மிகுந்ததை பயன்படுத்தாமல் வைத்துக் கொண்டிருப்பார்கள். இதன்;படி பார்த்தால், கடைசியாகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விடவும் முதலில் பயன்படுத்தும் ஆயுதங்கள் வீரியம் குறைந்தவையாகவே இருக்கும். இந்த எடுகோளின்படி யோசிக்கும்போது – மு.கா. தலைவர் ஹக்கீம் தொடர்பாக, பசீரிடமிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அல்லது ஆவணங்களில் வீரியம் குறைந்தது, அவர் தற்போது கையில் எடுத்திருக்கும் கட்சி சொத்துக்கள் பற்றிய விவகாரமாகத்தான் இருக்க வேண்டும். ஆக, பசீரிடம் ஹக்கீம் தொடர்பில் இன்னும் குற்றச்சாட்டுக்களும் அவற்றுக்கான ஆவணங்களும் இருக்குமாயின், அவை – இன்னும் பாரதூரமானவையாக இருக்கும் என்பது நமது அனுமானமாகும்.

இது இவ்வாறிருக்க, ‘மு.காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில் இத்தனை காலமும் கட்சித் தவிசாளர் பேசாமல் இருந்து விட்டு, இப்போது மட்டும் சந்தேகம் கேட்பது ஏன்’ என்கிற கேள்வியினை, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவரின் அபிமானிகளும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதனூடாக பசீரை கொச்சைப்படுத்தி, அவரின் கேள்விகளை வலுவிழக்கச் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். ‘கட்சிக்குள் மூன்று முறை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அனுபவித்த போது வராத ஞானம், அந்தப் பதவிகளினூடாக பணத்தையும் – அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட போது வராத ஞானம், இப்போது மட்டும் உனக்கு ஏன் வந்தது’ என்று, பசீரை அவர்கள் கேட்கின்றனர். நியாயப்படி பார்த்தால், பசீரை அப்படிக் கேட்பதில் பிழைகளில்லை. ‘ஹக்கீமிடமிருந்து கிடைத்த வரப்பிரசாதங்கள், பசீரை ஊமையாக்கியிருந்தது’ என்கிற குற்றச்சாட்டு மிகப் பெரிய உண்மையாகும். ஆனால், அப்போதெல்லாம் ஹக்கீமுடைய பிழைகளைத் தட்டிக் கேட்காதவர் – இனி எப்போதும் கேட்கவே கூடாது என்று நினைப்பதும், சொல்வதும் பாரிய பிழையாகும்.

மு.காங்கிரசின் சொத்துக்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகளை – தவிசாளர் பசீர் சேகுதாவூத் மட்டும் தட்டிக் கேட்கவில்லை. பசீர் கடிதம் எழுதுவதற்கு முன்னதாகவே, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் 12 பேர் சேர்ந்து, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கடிதமொன்றினை எழுதியிருந்தார்கள். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் தமக்குள்ள சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு கேட்டு எழுதப்பட்ட அந்தக் கடிதம், கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மு.கா.வின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தாருஸ்ஸலாம் ஊடாகப் பெறப்படும் வருமானங்கள் மற்றும் அந்த வருமானங்களுக்குரிய செலவுகள் என்று, பல்வேறு சந்தேகங்களுக்குரிய தெளிவினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், குறித்த கடிதத்தில் 06 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் கடிதத்துக்கும் திருப்கதிரமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் பலர், மு.கா. தலைவர் ஹக்கீமோடு நெருக்கமானவர்கள் என்பது கவனிப்புக்குரியது. அமைச்சர் ஹக்கீமுடைய பிரத்தியேகச் செயலாளரும், மு.காங்கிரசின் தற்போதைய பிரதித் தவிசாளரும், ஹக்கீமுடைய மச்சான் முறையானவருமான எம். நயிமுல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மு.காங்கிரசின் பொருளாளருமான எம்.எஸ்.எம். அஸ்லம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும், அமைச்சர் ஹக்கீமுடைய அதிகாரத்தின் கீழுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் இணைப்பாளராகக் கடமையாற்றுபவருமான யூ.எல்.எம். முபீன் மற்றும் தற்போதை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் உள்ளிட்ட பலர், அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தமை கவனிப்புக்குரியதாகும்.

இந்தக் கடிதத்தின் பிரதியொன்று, மிக அண்மையில் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் அதி உயர்பீட  உறுப்பினர்கள் 12 பேர் இணைந்து எழுதிய மேற்படி கடிதம் தொடர்பில், தலைவர் ஹக்கீமும் – தற்போதைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானும் உயர்பீடக் கூட்டமொன்றில் வழங்கிய மழுப்பலான பதிலில் தனக்கும், இன்னும் பல உயர்பீட உறுப்பினர்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை என்றும், அதனாலேயே – கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் கேள்வி கேட்டு, தலைவருக்கு – தான் கடிதம் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்னர் ஒரு தடவை ஊடக அறிக்கையொன்றின் வழியாகத் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறாயினும், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கட்சியான முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் உறுப்பினர்களும் – வாக்காளர்களும் ஒளிவு மறைவின்றியதொரு தெளிவினைப் பெற்றிருத்தல் அவசியமாகும். மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் மீதுள்ள விருப்பு, வெறுப்பு மற்றும் விமர்சனங்களினூடாக கட்சியின் சொத்து விவகாரம் பேசப்படலாகாது.

மு.காங்கிரசின் தலைமையகம் மற்றும் அந்தக் கட்சியின் ஏனைய சொத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் பொறுப்பினை மு.கா. தலைவர் ஹக்கீம் தட்டிக் கழிப்பதன் பின்னணியில், ஒரு கசப்பான உண்மை தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பது போல் தெரிகிறது.

சில உண்மைகளுக்கு ஒளிந்திருக்கத் தெரியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்