கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு கடிதங்களை சில உறுப்பினர்கள் பகிரங்கமாக கிழித்து எறிந்தனர்.
அவ்வாறு கடிதங்களை கிழித்து எறிந்த எவருக்கும் வேட்பு மனுவில் இடம் கிடையாது. ஒழுக்கமில்லாத, பண்பில்லாத நபர்களுக்கு கட்சியில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன்படி, குருணாகல், களுத்துறை மற்றும் கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்களின் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக காலத்தை விரயம் செய்யாது, அவர்கள் கட்சியை விட்டு விலகி வைப்பதாகத தீர்மானிக்கப்பட்டுள்ளது”.