கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

🕔 August 5, 2016

SEUSL - 01– முன்ஸிப் அஹமட் –

ணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதனையடுத்தே, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 27 ஆம் திகதி முதல், பணிப் பகிஷகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஆயினும், குறித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையினால், தமது பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

ஆயினும், வெள்ளிக்கிழமையிலிருந்து வேலைக்குத் திரும்பாதவர்கள் தமது பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிரடியாகஅறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு இணங்கவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிலர், பணிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனத்தினைக் கொண்ட கல்விசாரா ஊழியர்கள் 352 பேர் உள்ளனர் என்று, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களில் இருவர் மட்டுமே இன்றைய தினம் கடமைக்குத் திரும்பும் வகையில் கையொப்பம் இட்டிருந்தார்கள் என்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் வை. முபாறக் தெரிவித்தார்.

ஆயினும், இவ்வாறு கையொப்பமிட்ட இருவரும், பணியில் ஈடுபடாமல் திரும்பிச் சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்