தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்
திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த யுத்த காலத்தின்போது வெருகல் பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், சமூக ரீதியான பாதிப்புகள் இங்கு அதிகரித்துச் செல்லும் நிலைமையைக் காண முடிகின்றது.
பாடசாலைகளிலிருந்து இடைவிலகுதல், போதைப்பொருட்களின் பயன்பாடு, சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருகின்றன. சட்ட நடைமுறையூடாக இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.