தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

🕔 July 27, 2016

Hakeem - 0988த்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடமான ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில், ஆராய வேண்டியதில்லை என்று, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை என்றும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில், கண்டி, கட்டுகஸ்தோட்டையில், ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களை சொன்னார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை. இவ்வாறான பிரச்சினைகள் உருவெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்தக் கட்சியினுடைய இயக்கத்தை இல்லாமல் செய்யவேண்டும், கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு சித்திரிக்கப்படுகின்றது. இவற்றை பற்றி நாங்கள் அலட்டிக்கொண்டு, அவற்றுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் ஒருபோதும் கட்சியினால் முன்னேறிச் செல்ல முடியாது.

நாங்கள் உற்சாகமாக கட்சியினுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோமானால், அவை அனைத்தும் தானாகவே தவிடு பொடியாகிவிடும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு கட்சி தொடங்கிய காலந்தொட்டே முகங்கொடுத்து வருகின்றோம். இவற்றை களைந்து உதறித் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்ல முயலவேண்டும்.

சிலர் திடீரென முளைத்து தங்களுக்கு ஏதோ ஞானம் பிறந்து விட்டது போல், புதிய புதிய விடயங்களை கண்டுபிடிக்கின்றனர். காலத்தை வீணடித்துக்கொண்டு அவற்றை பின்தொடர்ந்து எம்மால் செல்ல முடியாது. கட்சியின் இயக்கத்தை எவராலும் முடக்கிவிட முடியாது.

இதுவரையில் கட்சியின் உச்சபீட கூட்டங்களில் கதைக்கப்படாத பல விடயங்கள் பத்திரிகைகளுக்கு பகிரங்கமாக அறிக்கையாகப் போய்கொண்டிருக்கின்றன. இன்று ஊடகங்களில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு, நானாகவே குழுவொன்றை நியமித்திருந்தேன். அதனை தவிர ஒரு வார்த்தையேனும் கட்சியின் கூட்டங்களில் பேசப்படவில்லை. அவ்வாறு பேசப்படாத பல விடயங்கள் இன்று பத்திரிகைகளில் அறிக்கைகளாகவும், கடிதங்களாகவும் பக்கம் பக்கமாக உலாவருகின்றன.

ஊர்களில் அனாமதேய அமைப்புக்கள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் என்ற பெயரில் கடிதம் எழுதுகின்றார்கள். ஏன் இவ்வாறு பெயர் குறிப்பிடாத, அடையாளத்தை மறைத்து முளைத்தெழுகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ள வேண்டும்? இவர்கள் யார், எத்தகையவர்கள் என்பதை கட்சித் தொண்டர்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.

இவற்றை தூக்கிப் பிடித்து, கட்சி முகங்கொடுத்த கடின சூழ்நிலைகள் எல்லாம் நீங்கி, இப்போது வசந்த காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்கவேண்டிய இந்த பயணத்தில் சோர்வடைந்து, இயக்கம் தடைபட்டு அழிந்து போகவேண்டுமா என்பதை நாம் சிந்திப்பது முக்கியமாகும்.

தலைமை தவறிழைக்க நேர்ந்தால், தொண்டர்கள் கேள்வி கேட்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. மாறாக, பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான், ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில் ஆராய வேண்டியதில்லை. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே அறிந்ததை ஏதோ புதியதொரு விடயத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கருதி பகிரங்கமாக கடிதம் எழுதுவது எவ்வளவு கீழ்த்தரமான காரியமாகும்.

எனவே, சுய விளம்பரங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான அறிக்கைகள், கடிதங்கள் தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ளாது இத்தகைய நிலவரங்களிலிருந்து விடுபட்டு, கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டமாக இந்தக் கட்டம் நோக்கப்படுதல் அவசியமாகும்.

சிலர் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும், நேசர்களையும் குறிவைத்து இப்போது செயற்பட தொடங்கியுள்ளனர். அவர்களை தேடிப்போய் பேசுவதும், வருவதுமாக நாடகங்கள் அரங்கேறுகின்றன.

சிலர் புதிய, புதிய சித்தாந்தங்களோடு வெளிவந்து பத்திரிகைகளில் வாழலாம் என்று நினைகிறார்கள். திட்டமிட்டபடி அறிக்கைகளும், கட்டுரைகளும் ஒவ்வொரு பத்திரிகைகளிலும் மாறி மாறி வருவதென்றால் அவை எங்கிருந்து முளைத்தன? இவ்வளவு காலமும் இந்தப் பெரிய பரம ரகசியங்கள் எங்கு ஒளிந்து கிடந்தன? ஒரேயடியாக புற்றுக்குள் இருந்து இத்தனைப் பாம்புகள் எவ்வாறு வெளிவந்தன? எனப் பார்த்தால் இதன் பின்னணி தெளிவாக விளங்கும்” என்றார்.Hakeem - 0983 Hakeem - 0986

Comments

புதிது பேஸ்புக் பக்கம்