குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

🕔 July 24, 2016

SLMC - 0222
– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டு அனுப்பியுள்ளமையானது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதித்துவம் வகித்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் – மு.கா. தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, கண்டி – கட்டுக்கஸ்தோட்டவில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலுக்கான அழைப்புக் கடிதங்கள், முஸ்லிம் காங்கிரசின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.   குறித்த கடிதங்களில் மு .கா. தலைவரின் மச்சானும், கட்சியின் பிரதித் தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டுள்ளார். இச் செய்கையானது  கட்சிக்குள் பலத்த கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கட்சி தொடர்பிலான கடிதத் தொடர்பாடல்களை கட்சியின் செயலாளரே மேற்கொள்தல் வேண்டும். அந்த வகையில், செயலாளர் எம்.ரி. ஹசனலியின் ஒப்பத்துடனேயே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஹசனலிக்கும் தலைவருக்கும் முரண்பாடு தோன்றியுள்ள நிலையில், கட்சிக்குள் உயர்பீட செயலாளர் எனும் பதtpயொன்றினை தலைவர் ஹக்கீம் உருவாக்கி, அதற்கு மன்சூர் ஏ. காதர் என்பவரை  நியமித்துள்ளார். மேலும், செயலாளர் ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களையும் உயர்பீட செயலாளருக்கு ஹக்கீம் வழங்கியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், செயலாளர் ஹசனலியை தவிர்த்தாலும், உயர்பீட செயலாளரின் ஒப்பத்துடனாவது கடிதத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், அதையும் தவிர்த்து விட்டு, தனது மச்சானும் கட்சியின் பிரதித் தவிசாளருமான எம். நயிமுல்லாவின் ஒப்பத்துடன், கட்சி சார்பில் கடிதங்களை அனுப்பி வைப்பதென்பது கட்சியின் விதிமுறைக்கு முரணானது என்று மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, கட்சியின் சட்ட திட்டங்களுக்கு முரணான வகையிலும், கட்சி செயலாளருக்குப் பதிலாக ஒப்பமிடுவதற்கு எவ்வித அதிகாரமுமற்ற ஒருவரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை தான் நிராகரித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் அழைக்கப்பட்ட கலந்துரையாடலை – பகிஷ்கரித்துள்ளதாகவும்  கடிதத்தினைப் பெற்றுக் கொண்ட ஒருவர் கூறினார்.

இவர் போன்று, கணிசமானோர் இந்தக் கலந்துரையாடலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரசின் மூத்த பிரமுகர்களை ஓரம் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், தற்போது – கட்சியை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் – மு.கா. பிரமுகர் ஒருவர் விசனம் தெரிவித்தார்.Letter - SLMC - 0122

Comments

புதிது பேஸ்புக் பக்கம்