விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், நாமல் ராஜபக்ஷவை – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
கிறிஸ் எனப்படும் கம்பனியிடமிருந்து 2013 ஆம் ஆண்டு, ரக்பி சுற்றுப் போட்டியொன்றினை நடத்துவதற்காக எனக் கூறி, மேற்படி பணத்தொகை பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதேவேளை, விசாரணைகளின் பொருட்டு – அவரின் நான்கு வங்கிக் கணக்குகளின் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.