லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

🕔 July 17, 2016

Lasantha - 09ண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின் படுகொலையின் பின்னர் – இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் சேவையாற்றுவதற்காக, ராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையின் பேரில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம என்பவர், லசந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபராக, ரகசிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று  நீதிமன்றத்தில் அவர் –  ஆஜர்படுத்தப்பட்டார்.

2009ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லசந்தவின் தாக்குதலை நேரில் கண்டவர்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தாலும் தற்பொழுது இவ்வாக்குமூலம் அனைத்தும் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில் முதலாவதாக கைது செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பொருட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தாமல், அவர்களை விடுதலை செய்யுமாறு, விசாரணைக்கு பொறுப்பாகவிருந்த – ஓய்வுபெற்ற உதவி பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயகவுக்கு, அரச புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சீ.என்.வாகிஷ்ட உத்தரவிட்டிருந்தார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கீர்த்தி கஜநாயக மற்றும் சீ.என்.வாகிஷ்ட ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லசந்த தாக்குதலுக்கு பரிசாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம, ஜேர்மனியின் இலங்கைக்கான தூதரகத்தில் மூன்றரை வருடங்களாக சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்