சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா
– றிசாத் ஏ காதர் –
‘சின்னப்பாலமுனை முஹா’ என இலக்கிய உலகில் அறியப்படும் பி. முஹாஜிரீன் எழுதிய ‘கடலோரத்து மணல்’ எனும் கவிதை நூலின் அறிமுக விழா, பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நூல் அறிமுக விழாவுக்கு கலாபூஷணம் கவிஞர் பாலமுனை பாறூக் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், புகழ்பெற்ற கவிஞர் சோலைக்கிளி இலக்கிய அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. ஜவாத், சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மற்றும் ஏ.ஏல்.தவம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைத் தலைவர் எம்.ஏ. பகுர்தீன், கவிஞரும் அறிவிப்பாளருமான எஸ். ரபீக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
‘கடலோரத்து மணல்’ எனும் மேற்படி நூல், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விழாவின் வரவேற்புரையினையினை அம்பாறை மாவாட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் நிகழ்த்தினார். நூல் பற்றிய மதிப்பீட்டுரைகளை கவிஞரும் ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹுர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நிகழ்த்தினர்.