ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

🕔 June 18, 2015

Bangaladesh Minister - 03மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார்.

இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை,  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு இன்று வியாழக்கிழமை அவரது அமைச்சில் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினார். இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தரீக் அஹ்ஸன் மற்றும் அந்நாட்டு அமைச்சரின் மேலதிகச் செயலாளர் ஹாரூன் அல் ரஷீத், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருதனர்.

‘பங்களாதேஷ் கலைஞர்கள் செழுமையான இலக்கியங்களையும், தத்ரூபமான திரைப்படங்களையும் படைத்தளித்திருக்கின்றனர். வங்காளத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அக்காலப்பிரிவில் பாகிஸ்தானில் வாழ்ந்த கவிஞர் அல்லமா இக்பால் ஆகியோரின் கவித்துவமும், தேசாபிமானமும் இன்னும் கூட மெச்சப்படுகிறது’ எனக்கூறிய அமைச்சர் ஹக்கீம், இலங்கைக்கும் – பங்களாதேஷூக்குமிடையில், இலக்கியப் பாலம் அமைக்கப்பட வேண்டுமென்றார்.

இலங்கையில் பங்களாதேஷ் மாணவர்கள் உயர்கல்வி கற்பதாகவும், குறிப்பாக களனிப் பல்கலைக்கழகத்தில் பௌத்த சமய, பாளி மொழி துறைகளில் அவர்கள் பயின்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்தில் – குறிப்பாக, தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் பங்களாதேஷ் மாணவர்கள் கற்பதற்கும், விரிவுரையாளர்கள் கற்கை நெறிகளில் பங்களிப்புச் செய்வதற்கும் – உரிய தரப்பினரோடு தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் நெசவுத்துறையின் வளர்ச்சிக்கும் பங்களாதேஷ் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு இதன்போது கூறுகையில்; நெசவு, சணல் போன்ற கைத்தொழில் முயற்சிகளில் – பங்களாதேஷ் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றார்.

மியன்மாரில் படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் துன்புறுத்தப்படுகின்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில் – அமைச்சர் ஹக்கீம், பங்களாதேஷ் அமைச்சரிடம் வினவினார்.

“ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கின்றது. அவர்கள் பேசும் மொழியும் பொதுவான வங்காள மொழியிலிருந்து வேறுபட்டதோடு, அவர்கள் தனியான கலாசாரப் பின்னணியையும் கொண்டவர்கள். நீண்டகாலத்திற்கு முன்னர் – அரசியல் காரணிகளுக்காக, அவர்கள் மியன்மாரில் சென்று குடியேற நேர்ந்திருக்கின்றது. அவர்களது நிலைமை கவலைக்குரியது” என பங்களாதேஷ் அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கைக் கரையை வந்தடைந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் மிரிஹானையிலும், வெள்ளவத்தையிலும் தங்க வைக்கப்பட்டு, அவர்களது நலன்கள் மீது உரிய கவனஞ் செலுத்தப்பட்டதாகவும்,   30 பேர் வரை தவிர – ஏனையவர்களை அமெரிக்கா பொறுப்பேற்றிருப்பதாக தெரிய வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

பொதுவாக தற்கால சூழ்நிலையில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் பல்வேறு நாடுகளிலும் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், அதன் பின்னணியில் சில விஷமச் சக்திகள் செயல்பட்டு வருவது குறித்தும் தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் அமைச்சரிடம் கவலை தெரிவித்தார். மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியம் பற்றியும் இதன்போது பேசப்பட்டது.Bangaladesh Minister - 02Bangaladesh Minister - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்