பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நாளை புதன்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்புப் பெரிய பள்ளிவாசலில் பிறை பார்ப்பது தொடர்பிலான மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அங்கு கூடிய பிறைக்குழு இத்தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் மௌலவி ஏ.டபிள்யு.எம். ரியாழ் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச அளவில் உள்ள ஏனைய நாடுகளிலும் நாளை புதன்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.